கோவை:மருத்துவக் கல்வி, தொழில்நுட்பக் கல்வியை தாய்மொழியில் கற்பிக்க வேண்டும் என தமிழகத்திற்கு 2022ஆம் ஆண்டு அறிவரை சொன்னவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவை பீளமேடு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சி மாவட்ட அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். பின்னர் புதிய அலுவலகத்தில் குத்துவிளக்கு ஏற்றிய அமித்ஷா மாவட்ட பாஜக அலுவலகத்தை ஒவ்வொரு அறையாக சென்று பார்வையிட்டார்.
விழாவில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் பா.ஜ.க அலுவலகம் இருக்க வேண்டும் என தேசிய தலைவராக இருந்தபோது செயல்படுத்த அமித்ஷா நடவடிக்கை எடுத்தார். வீடியோ கான்பிரன்ஸ் ரூம், புத்தக அறை என அனைத்து வசதிகளும் இந்த கட்டடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சி பெற்று வருவதால், நம் மீது கல் வீசுகின்றனர். எதிர்க்கட்சியினரின் திட்டங்கள் மக்களிடம் எடுபடவில்லை. பிரதமரின் பெயரில் மருந்தகம் அமைக்க தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லை. ஆனால், இப்போது முதல்வர் பெயரில் அதே போன்று மருந்தகங்கள் தொடங்குகின்றனர். பெரியார், அண்ணா, கலைஞர் பெயர்களில் மருந்தகம் அமைக்காமல் முதல்வர் மருந்தகம் என்று பெயர் வைத்ததே பாஜகவுக்கு கிடைத்த வெற்றி தான். 2026 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவை வேறோரடு பிடுங்கி எறியும் காலம் வரும்.
இதையும் படிங்க:மறுசீரமைப்பால் தென்னிந்திய மாநிலங்களில் ஒரு தொகுதி கூட குறையாது....அமித்ஷா விளக்கம்!
இந்தியை திணிக்கின்றோம் என்கின்றனர். ஆனால் காசியில் தமிழ் சங்கமம் மூன்றாவது முறையாக நடத்தி வருகின்றோம். அமெரிக்க பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைத்து இருக்கிறோம். மருத்துவக் கல்வி, தொழில் நுட்ப கல்வி ஆகியவை தாய் மொழியில் தான் இருக்க வேண்டும் என 2022ஆம் ஆண்டு தமிழக அரசுக்கு அறிவுரை சொன்னவர் மத்திய அமைச்சர் அமித்ஷா. அவர் எப்படி இந்தியை திணிப்பார்?
சிஆர்பிஎப், சிஐஎஸ்எப் தேர்வுகளை ஆங்கிலம் தவிர இப்போது தமிழ் உட்பட பிராந்திய மொழிகளிலும் எழுதமுடியும். இதனை பா.ஜ.க தான் அமல்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் மாணவர்கள் ஆங்கில வழி கல்விக்கு போய்விட்டனர். தமிழக அரசு அதை மறைக்க முயல்கிறது. முதல்வர் என்ன தான் முயற்சி செய்தாலும், 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற முடியாது. அரவிந்த கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்று விட்டார். மேற்கு வங்க முதல்வர் மம்தா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகிய இருவரும் அடுத்த தேர்தலில் தோற்று வீட்டுக்கு செல்வார்கள்,"என்றார்.