சென்னை: மாநிலங்களவையில் அரசியல் சாசனத்தின் மீதான விவாதத்தின் போது, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதாக திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த சூழலில், இன்று (டிசம்பர் 19) மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
மாநிலங்களவையில் டிசம்பர் 17 அன்று நடந்த அரசியல் சாசனம் மீதான விவதத்தின் போது பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "தற்போது 'அம்பேத்கர், அம்பேத்கர்' என்று பேசுவது பேஷனாகி விட்டது. இப்படி சொல்வதற்கு பதிலாக கடவுளின் நாமத்தை பல முறை உச்சரித்திருந்தால், அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும்," என்று கூறினார். இது ஒரு பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் நேற்று புதன்கிழமை (டிசம்பர் 18) நாடாளுமன்றத்திற்கு வெளியே அம்பேத்கர் படத்தை கையில் ஏந்தி போராட்டம் நடத்தினர். மேலும், அமித்ஷா கருத்து குறித்து பல்வேறு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், இன்று (டிசம்பர் 19) ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது.