சென்னை: திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, "திராவிட மாடல் அரசின் எல்லோருக்கும் எல்லாம்" என்ற சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மார்ச் 3-ஆம் தேதி, கோவை தேர்முட்டி திடலில் நடைபெற்றது. கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தலைமை வகித்த இக்கூட்டத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், "இதுவரை பிரதமர் மோடி கலவரம் நடந்த மணிப்பூர் மாநிலத்திற்குச் செல்லவில்லை. இந்த சம்பவம் காரணமாக நாடாளுமன்றத்திலே கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். அதற்கு மணிப்பூர் மாநில முதலமைச்சர் பைரன் சிங், 'அது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. எங்கள் மாநிலத்தில் நடப்பதுதான்' என்று கூறினார். இந்த சம்பவம் நடந்த பின்பும், பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் மாநிலத்தின் முதலமைச்சர் பைரன் சிங் ராஜினாமா செய்தாரா? அவர் ஒரு காண்டாமிருகம்.
அவரை ஆதரிக்கும் மோடி மற்றும் அமித்ஷாவிற்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை மக்கள் நீங்களே முடிவு செய்யுங்கள். நாடாளுமன்றக் கூட்டத்தில் ஒரு மணி நேரம் கேள்வி நேரத்திற்கு ஒதுக்கப்படும். நாட்டில் என்னென்ன பிரச்னைகள் உள்ளது என்பதை பிரதமர் இந்த கேள்வி நேரம் மூலமாக நன்கு தெரிந்து கொள்ள முடியும்.
ஆனால், இதுவரை கேள்வி நேரத்திற்கு பிரதமர் மோடி வந்தது இல்லை. நாங்கள் நாடாளுமன்றத்தில் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருப்போம். ஆனால், பிரதமர் மோடி மற்ற நாடுகளுக்குச் சுற்றுலா சென்று கொண்டிருப்பார். இப்படி ஜனநாயக மரபுகளைச் சிதைக்கின்ற ஒரு பிரதமரை, நான் இதுவரை கண்டதில்லை.
பிரதமர் மோடி கூறுகிறார், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் திமுக இருக்காது என்று. நான் கூறுகிறேன், 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று, தற்போதுள்ள மத்திய அரசை மாற்றினால், கண்டிப்பாக பிரதமர் மோடி சிறைக்குச் செல்வார்.