சென்னை:நாடு முழுவதும் சுங்கக் கட்டணமானது, தேசிய நெடுஞ்சாலைத் துறையால் வருடத்திற்கு இரண்டு முறை உயர்த்தப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்கள் உயர்த்தப்படுகின்றது. அந்த வகையில், நேற்று (செப் 1) முதல் சுங்கக் கட்டண உயர்வு நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் நேற்று முதல் 25 சுங்கச் சாவடிகளின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுங்கக் கட்டணம் உயர்ந்துள்ளதால், ஆம்னி பேருந்து கட்டணமும் உயரும் என தகவல் வெளியான நிலையில், இதற்கு அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மறுப்பு தெரிவித்து செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் 5% முதல் 7% வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டு முன் இருந்த கட்டணத்தை விட கூடுதலாக ரூ.5 முதல் ரூ.150 வரை அதிகம் உயர்த்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், இந்த பொருளாதார நெருக்கடியை ஆம்னி பேருந்து உரிமையாளர்களே ஏற்றுக்கொள்ளும் வகையில், ஆம்னி பேருந்து கட்டணம் வழக்கத்தை விட உயராது என தெரிவித்துக் கொள்கிறோம்.