தஞ்சாவூர்:அதிமுக சார்பில், அண்ணாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தஞ்சாவூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் செய்தித் தொடர்பாளருமான வைகைச்செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் சேகர், மாநகரச் செயலாளர் சரவணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த வைகைச்செல்வன் கூறியதாவது, "கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தவர் கருணாநிதி, அப்போதே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. கச்சத்தீவை தாரை வார்த்ததன் காரணமாக தமிழக மீனவர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் தொடர்ந்து எழுந்து வருகிறது.
குறிப்பாக, மீனவர்கள் சிறைபிடிப்பதும், அவர்களின் படகுகளை சேதப்படுத்துவதும் போன்றவை நடைபெற்று வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்து வேண்டும். மேலும், மீனவர்கள் பாதுகாப்பை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும். மிக விரைவில் கச்சத்தீவை மீட்டு நமது உரிமையை நிலைநாட்டுவதற்கு தமிழக அரசு, மத்திய அரசுடன் துணை நின்று வெற்றியைப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
'ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு' ஏற்கனவே அதிமுக ஆதரவு தெரிவித்திருந்தோம். தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், மூன்று மாதங்களுக்கு முன்பு தான் நாடாளுமன்றத் தேர்தல் நடந்திருக்கிறது. மூன்று நாட்களுக்கு முன்பு தான் ஜம்மு காஷ்மீர் தேர்தல் நடந்திருக்கிறது.