சென்னை: பட்ஜெட் 2025 பீகார் மாநில பட்ஜெட் போன்று உள்ளது. பேரறிஞர் அண்ணா கூறியது போன்று, வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது போன்று உள்ளது. திருக்குறளை மட்டும் வாசிக்கும் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டியுள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் 56 வது நினைவு நாள் இன்று (பிப்ரவரி 03) தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். இதில், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது, “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது தந்தையின் புகழை பாடுவதும், அவரது தந்தையின் பெயரை வைப்பதுமாக செயல்பட்டு வருகிறார். இந்த ஆட்சி கலக்க்ஷன், கரெக்க்ஷன், கமிஷன் என்ற அடிப்படையிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திமுகவை பொருத்தவரை அண்ணாவை மறந்தவர்கள், அண்ணாவின் வழி நடக்காதவர்கள், அண்ணாவை பின்பற்றாதவர்கள்.
ஈசிஆர் விவகாரம் ஆர்.எஸ்.பாரதியின் திரைக்கதை:
அறிவாலயத்தின் விசாரணை அதிகாரி ஆர்.எஸ்.பாரதி. சென்னை ஈசிஆரில் காரில் பெண்களை துரத்திய விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு அரசியல் பின்புலம் உள்ளதாக ஆர்.எஸ். பாரதி கூறுகிறார். குற்றம் சாட்டப்பட்ட சந்துருவை பிடித்து வாக்குமூலம் வாங்கியுள்ளனர்.
அதில், தேவையானதை மட்டும் எடிட் செய்து கொடுத்துள்ளனர். ஏன் சந்துருவை பத்திரிகையாளர்கள் முன்பு நிற்க வைத்து பேச வைக்கவில்லை?. சம்பவம் நடந்த அன்றே பிடிக்காமல் நான்கு நாள் கழித்து பிடித்து மாறி மாறி வாக்குமூலம் சொல்வதும், சந்துருவின் வீடியோ முழுக்க முழுக்க திமுக மற்றும் ஆர்.எஸ்.பாரதியின் திரைக்கதை, வசனம், இயக்கம்.
இதையும் படிங்க:பேரறிஞர் அண்ணா நினைவு நாள்.. மலர்வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!