வேலூர்: தொழிலதிபர் சேகர் ரெட்டியின் தந்தை சமீபத்தில் உயிரிழந்த நிலையில், காட்பாடியில் உள்ள சேகர் ரெட்டியின் இல்லத்திற்கு முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேரில் சென்று, சேகர் ரெட்டியின் தந்தை உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் சிறந்த முறையில் செயல்பட்டு வந்தது. லாபகரமாக 7 கோடி ரூபாய் அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து அரசுக்கு வழங்கினோம். ஆனால், இன்றைக்கு புதிதாக செட்டாப் பாக்ஸ்களை கூட வாங்கவில்லை.
அவ்வாறு புதிதாக வாங்கி இருந்தால், தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் மென்மேலும் வளர்ந்திருக்கும். தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் டிஜிட்டல் லைசென்ஸ் வென்ற ஒரே நிறுவனம் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் தான்.