தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

53 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுக.. தொடர் தோல்விகளில் இருந்து மீளுமா?

அதிமுகவின் 53வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் இருந்து தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக தோல்விகளில் இருந்து இனியாவது மீளுமா?

By ETV Bharat Tamil Nadu Team

Published : 6 hours ago

அதிமுக அலுவலகம், எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்(கோப்புப்படம்)
அதிமுக அலுவலகம், எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்(கோப்புப்படம்) (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:அஇஅதிமுக (AIADMK) இன்று 53 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. இந்த தருணத்திலாவது எம்ஜிஆர் தொடங்கிய கட்சி மீண்டு எழ வேண்டும் என்று அதிமுகவின் உண்மை தொண்டர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா என்பதை இப்போது பார்க்கலாம்.

நாடக நடிகராக இருந்த காலத்தில் இளம் வயதில் அறிஞர் அண்ணாவால் ஈர்க்கப்பட்ட எம்ஜிஆர் திமுகவில் இணைந்தார். அவர் திரையுலகில் நடிகராகப் புகழ் பெற்று விளங்கிய காலத்தில் திமுகவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார். அண்ணா மறைவுக்குப் பின்னர் திமுகவில் நேரிட்ட அரசியல் சூழல்கள் எம்ஜிஆருக்கு கசப்பை ஏற்படுத்தின. எனவே அவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தனிக் கட்சியை கடந்த 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி மதுரையில் தொடங்கினார்.

எம்.ஜி.ஆரின் முத்திரை பதித்த வெற்றி:தனிக்கட்சி தொடங்கிய ஆறு மாதத்துக்குள் திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளரை எம்ஜிஆர் களம் இறக்கினார். திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில்தான் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது. அப்போது ஆட்சியில் இருந்த திமுக முதல்வர் கருணாநிதி மற்றும் அமைச்சர்கள் திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலில் பணியாற்றினர். எம்ஜிஆர் தனி ஆளாக தமது கட்சிக்காரர்களுடன் பரப்புரையில் ஈடுபட்டார்.

திண்டுக்கல் இடைத்தேர்தல் முடிவு 1973, மே 21-ம் தேதி வெளியானது. அந்த தேர்தல் முடிவு தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய ஆச்சர்யத்தை அளித்தது. அதிமுக சார்பில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் நிறுத்தப்பட்ட மாயத்தேவர் வெற்றி பெற்றார். எம்ஜிஆர் கட்சி தொடங்கிய ஆறு மாதத்துக்குள் திண்டுக்கல் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றது இன்றளவிலும் வரலாற்று சாதனையாகும். அவருக்கு இருந்த தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக மட்டுமே இது சாத்தியமானது. 1974-ஆம் ஆண்டு கோவை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றிப் பெற்றது. அங்கு வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் அரங்கநாயகம், அ.தி.மு.க-வின் முதல் எம்எல்ஏவாக சட்டப்பேரவைக்கு சென்றார்.

தலா ஒரு எம்பி, ஒரு எம்எல்ஏவுடன் பயணத்தை தொடங்கிய அதிமுக 1977ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டது. எம்ஜிஆர் தனி ஒரு மனிதராக அனைத்து தொகுதிகளுக்கும் சென்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது இரவு பத்து மணிக்குள் தேர்தல் பரப்புரையை முடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் தேர்தல் ஆணையத்தால் அமல்படுத்தப்படவில்லை. எனவே, எம்ஜிஆர் நள்ளிரவு தாண்டி பரப்புரை கூட்டத்துக்கு வந்தாலும், ஒட்டு மொத்த கூட்டமும் காத்திருந்து அவரை பாத்து விட்டு, அவரது பேச்சை கேட்டு விட்டே கலைந்துச் சென்றது.

வரலாறு படைத்த அதிமுக:திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோரைப் போல மேடைகளில் எம்ஜிஆரால் சரளமாக உரையாற்ற இயலாவிட்டாலும் கூட அவரது முகத்தை பரப்புரை மேடையில், பரப்புரை ஊர்வலத்தில் பார்ப்பதற்காகவே தமிழ்நாடு முழுவதும் கூட்டம் அலைமோதியது. எம்ஜிஆர் என்ற தனிமனிதரின் செல்வாக்கு அதிமுகவில் ஆதிக்கம் செலுத்தியது. 1977ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 30.4% வாக்குகளைப் பெற்று 130 தொகுதிகளைக் கைப்பற்றியது. கட்சி தொடங்கிய நான்கு ஆண்டுகளுக்குள் ஒரு அரசியல் கட்சி ஆட்சியை பிடித்த வராலாறு புதிதாக எழுதப்பட்டது.

எம்ஜிஆருக்கு பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்டோரிடம் இருந்த செல்வாக்கு காரணமாகவே மாபெரும் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. அதே ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த அதிமுக 30.4% வாக்குகளைப் பெற்று 17 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றது.

ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து மூன்று ஆண்டுகளுக்கு உள்ளாக 1980ஆம் ஆண்டு மீண்டும் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 25.38% வாக்குகளைப் பெற்று 2 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. மேலும், மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டுமெனில் வலுவாக இருக்கும் தேசிய கட்சி ஒன்றின் தயவு தேவை என்பதையும் எம்ஜிஆர் உணர்ந்தார்.

எனவேதான் அவர் மறையும் வரை காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்து பிரியவில்லை. மக்களவைத் தேர்தலில் பின்னடவை சந்தித்தபோதிலும், அதே ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 38.8% வாக்குகளைப் பெற்று 129 இடங்களை கைப்பற்றியது. மீண்டும் எம்ஜிஆர் முதலமைச்சர் ஆனார். மக்களவைத் தேர்தலில் தோற்றபோதிலும் கட்சியினர் மத்தியில் ஆளுமை மிக்க தலைவராகவும், மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவராகவும் இருந்ததாலேயே எம்ஜிஆரால் தோல்வியில் இருந்து மீள முடிந்தது.

பரப்புரைக்கே செல்லாமல் வெற்றி பெற்ற எம்ஜிஆர்:1984ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தல் இரண்டுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது. அந்தக் காலக்கட்டத்தில் உடல்நலக்குறைவால் அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் எம்ஜிஆர் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், அதிமுக சார்பில் ஆர்.எம்.வீரப்பன், நெடுஞ்செழியன் உள்ளிட்ட தலைவர்களும், அப்போது அதிமுகவில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த ஜெயலலிதாவும் அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் எம்ஜிஆரை முன்னிறுத்தி பரப்புரை மேற்கொண்டனர்.

எம்ஜிஆர் அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காட்சிகளைக் கொண்ட வீடியோ வெளியானது. மேலும், மருத்துவமனையில் தொப்பியில்லாமல் சாதாரண நிலையில் தோற்றமளிக்கும் எம்ஜிஆரைக் கொண்ட போஸ்டர்கள் தமிழகம் முழுவதும் மூலை முடுக்குகளில் எல்லாம் சுவர்களை அலங்கரித்தது. எம்ஜிஆரை அதிமுக தொண்டர்களும் சரி, சினிமா ரசிகர்களும் சரி தொப்பி இல்லாமல் பார்த்தது இல்லை. தொப்பி இல்லாமல் தமது படம் வருவதை எம்ஜிஆரே கூட விரும்பியதில்லை.

எம்ஜிஆர் நேரடியாக பரப்புரையில் ஈடுபடாவிட்டாலும் அவர் மீதான அனுதாப அலையில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்றது. இதற்கும் எம்ஜிஆரின் தனிப்பட்ட செல்வாக்கே காரணமாக அமைந்தது. 37 % வாக்குகளைப் பெற்று 132 இடங்களைக் கைப்பற்றியது. 1984ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை விட்டுக் கொடுத்த அதிமுக 12 இடங்களில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது.

இரண்டாக பிரிந்த அதிமுக:அதிமுகவின் பலம் வாய்ந்த ஓட்டு வங்கியாக திகழ்ந்த தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்த எம்ஜிஆர் 1987 ஆம் ஆண்டு உயிரிழந்தார். எம்ஜிஆர் மறைந்த நிலையில் அதிமுகவில் ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்ற பிளவு நேரிட்டது. இதனால், அதிமுக ஆட்சியின் பெருமான்மை குறைந்தது. ஜானகி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.

1989ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியாகவும், ஜானகி தலைமையில் இன்னொரு அணியாகவும் அதிமுக தேர்தல் களத்தில் இருந்தது. எனவே வாக்குகள் பிரிந்ததால் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியது. ஜெயலலிதா தலைமையிலான அணி 22.2% வாக்குகளை மட்டும் பெற்று 27 இடங்களை வென்றது. ஜானகி அணி 9.2 % வாக்குகளைப் பெற்று 2 இடங்களைப் பெற்றது.

அதிமுகவில் ஜெயலலிதாவின் ஆதிக்கம்:அதிமுக ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை அதிமுக தலைவர்கள் உணர்ந்தனர். எம்ஜிஆரின் மனைவி ஜானகி, கட்சியில் இருந்து ஒதுங்கியிருக்க சம்மதித்தார். அதிமுக முழுமையாக ஜெயலலிதா வசம் வந்தது. 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலை பிளவு பட்டிருந்த அதிமுக ஒன்றிணைந்து எதிர்கொண்டது. இதனால், 17.12 % வாக்குகளைப் பெற்று 11 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுகவின் இரண்டு அணிகளும் இணைந்ததற்கு பின்னர் 1991ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 44.4% வாக்குகளைப் பெற்று 164 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றது.

முதல்வராக இருந்த ஜெயலலிதா ஒருமுறை, ராஜிவ் காந்தி சிந்திய ரத்தத்தால் அதிமுக வெற்றி பெறவில்லை என்று ஒரு கருத்தை வெளியிட்டார். இது காங்கிரஸ் தலைவராக இருந்த மூப்பனார் உள்ளிட்டோரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் அதிமுக ஆட்சிக்கு எதிராக கடும் அதிருப்தி அலை வீசியதால் 1996ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 21.47 % வாக்குகளை மட்டும் பெற்று 4 இடங்களில் மட்டுமே ஜெயலலிதாவால் வெற்றி பெற முடிந்தது.

மீண்டும் வெற்றி பெற்ற ஜெயலலிதா:இனி அதிமுக அவ்வளவுதான், ஜெயலலிதாவால் மீண்டு வருவது கடினம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதினர். அனைவரது எண்ணத்துக்கும் மாறாக இரண்டு ஆண்டுகள் கழித்து 1998ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 25.89 % வாக்குகளைப் பெற்று 18 தொகுதிகளில் வெற்றி பெற்று தமது அரசியல் எதிரிகளை ஜெயலலிதா வியக்க வைத்தார். தம்மால் தோல்விக்கு பின்னரும் மீண்டு எழ முடியும் என்பதை கட்சியினருக்கும், எதிர்க்கட்சியினருக்கும் எடுத்துக் காட்டினார்.

வாஜ்பாய் தலைமையிலான மத்திய ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை ஜெயலலிதா விலக்கிக் கொண்டதால் ஆட்சி கவிழ்ந்தது. எனவே ஒரு ஆண்டு கழித்து 1999ஆம் ஆண்டில் மீண்டும் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற தேர்தலில் அதிமுக 25.68% வாக்குகள் பெற்று 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த முறைகளைப் போல மோசமாக அதிமுக தோற்கவில்லை.

2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியில் இருந்து மீண்டும் விஸ்வரூபமாக எழுந்து நின்றது. 1996 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக தோல்விக்கு காரணமாக அமைந்த மூப்பனாரின் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் இந்த முறை அதிமுக அணியில் இடம் பெற்றது. தம்மை விமர்சித்த மூப்பனாரை மீண்டும் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள ஜெயலலிதா தயங்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் உடல் நலக்குறைவாக வீட்டில் ஓய்வில் இருந்த மூப்பனாரை, நேரில் சென்று ஜெயலலிதா சந்தித்தார். இது போன்ற அவரது அரசியல் உத்திகள் 2001 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் 31.4% வாக்குகளை அதிமுக பெற்று 132 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

தோல்விகளில் துவளாத ஜெயலலிதா:ஆனால், அதே நேரத்தில் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக 29.77% வாக்குகளை பெற்றும் கூட ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. 1998ஆம் ஆண்டு பாஜக ஆட்சியை கவிழ்த்த ஜெயலலிதா 2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அக்கட்சியுடன் கூட்டணி வைக்க தயங்கவில்லை. எனினும் அவர் தோல்வியை தழுவினார். ஜெயலலிதாவுக்கு எதிரான அலை ஏதும் வீசவில்லை எனினும் 2006ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவால் வெற்றி பெற முடியவில்லை. 32.6% வாக்குகளைப் பெற்றபோதிலும் 61 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. ஆனால், அதிமுகவை விட குறைவாக 26.5 % வாக்குகளை மட்டுமே பெற்று 96 இடங்களை பிடித்த திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் பலத்தால் ஆட்சி அமைத்தது.

2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மதிமுக, பாமக, இடது சாரி கட்சிகளுடன் கூட்டணி வியூகம் அமைத்த ஜெயலலிதா 23 தொகுதிகளில் போட்டியிட்டு 9 தொகுதிகளில் வெற்றி பெற்றார். 22.88% வாக்குகளை அதிமுக பெற்றது. 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்த தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் தலைவர் விஜயகாந்த் உடன் கூட்டணி அமைத்து அதிமுக வெற்றி பெற்றது. தம்மை கடுமையாக விமர்சித்த விஜயகாந்துடன் அரசியல் ரீதியாக கூட்டணி வைக்க ஜெயலலிதா தயங்கவில்லை. எனவே, 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மீண்டும் அபார வெற்றி பெற்றது. அதிமுக 38.4% வாக்குகள் பெற்று 150 இடங்களில் வென்றது.

மோடி அலையிலும் வெற்றி:2014 ஆம் ஆண்டு நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை வீசியது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி ஆகிய பலம் பொருந்திய கூட்டணிகளுக்கு இடையே அதிமுக தனித்துப் போட்டியிட்டது. மோடியா, லேடியா என்று ஜெயலலிதா பரப்புரைகளில் அதிரடி கேள்வி எழுப்பினார். 39 தொகுதிகளில் போட்டியிட்டு 44.92% வாக்குகளைப் பெற்று 37 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. ஜெயலலிதாவின் ஆளுமைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இன்றளவும் பார்க்கப்படுகிறது.

2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, கூட்டணி பலம் ஏதும் இன்றி 40.88 % வாக்குகளைப் பெற்று 136 இடங்களில் வெற்றி பெற்றது. ஜெயலலிதா தனி ஒரு ஆளாக மாநிலம் முழுவதும் ஹெலிகாப்டர் மூலம் பயணித்து பொதுக்கூட்டங்களில் உரையாற்றினார். தேர்தல் கருத்துக் கணிப்புகளை எல்லாம் மீறி ஜெயலலிதா தமது செல்வாக்கின் மூலம் 2016ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றார். எம்ஜிஆர் மட்டுமே தொடர்ச்சியாக இரண்டு முறை முதலமைச்சராக இருந்தார் என்ற சாதனையை ஜெயலலிதா முறியடித்தார். இதற்கு அவரது ஆளுமையும், அவரது அரசியல் தந்திரமும் காரணம் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அனைவரையும் அரவணைக்க எடப்பாடி தயக்கம்:ஜெயலலிதா உடல் நலக்குறைவால் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்த நிலையில் தமிழக அரசியலில் அதிமுக மீண்டும் அரசியல் ரீதியான பின்னடவை எதிர்கொண்டுள்ளது. முதலில் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆனார். பின்னர் சசிகலா முதலமைச்சராக முயற்சி செய்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் போர்கொடி தூக்கினார். அதே சமயத்தில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல நேர்ந்தது. எனவே எதிர்பாராத விதமாக சசிகலாவின் ஆதரவுடன் அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவிக்கு வந்தார்.

சசிகலா சிறை சென்ற நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தனி அணியாக செயல்பட்ட நிலையில் அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தார் அப்போதைய சபாநாயகர் தனபால், இதனால், 2019ஆம் ஆண்டு 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தல் எடப்பாடி பழனிசாமியின் ஆளுமைக்கு வைக்கப்பட்ட பரிட்சையாகவே பார்க்கப்பட்டது. அந்த பரிட்சையில் அவர் போதுமான அளவு வெற்றி பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்த இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களில் வெற்றி பெற்றது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு 9 இடங்கள் மட்டுமே கிடைத்தது. இதன் மூலம் எடப்பாடி ஆட்சிக்கு பெருமான்மை கிடைத்த போதிலும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற முடியவில்லை என்றும், ஜெயலலிதா இருந்திருந்தால் 22 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்க முடியும் என்றே பலரும் கருத்து கூறினர். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் அதிமுக கடுமையான ஒரு தோல்வியை எதிர்கொண்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 19.39% வாக்குகளை மட்டுமே பெற்றதோடு தேனி மக்களவைத் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.

அதிமுகவின் தொடர் தோல்விகள்:இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தல் தோல்வி ஆகியவற்றால் அதிமுகவில் ஆளுமை மிக்க தலைவர் இல்லை என்ற அதிருப்தி அதிகரித்தது. 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 33.29% வாக்குகளைப் பெற்று 66 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 20.46% வாக்குகள் மட்டுமே பெற்று போட்டியிட்ட 34 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. இவையெல்லாம் எடப்பாடி பழனிசாமி என்ற ஆளுமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

மேலும், ஜெயலலிதாவைப் போல தேர்தல்களின் போது அந்தந்த சூழல்களுக்கு தகுந்தவாறு கூட்டணி வியூகத்தை வகுக்கும் திறனும் எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை என்றும் அதிமுக தொண்டர்கள் கருதுகின்றனர். பாஜக கூட்டணி தேவையில்லை என்ற போதிலும் பாஜகவை பற்றி, பிரதமர் மோடியை பற்றி அரசியல் ரீதியான விமர்சனங்கள் ஏதும் முன்வைக்காதது எடப்பாடி பழனிசாமி மீதே சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதனால்தான் திமுக கூட்டணியில் அதிருப்தியில் இருந்த கட்சிகள் கூட எடப்பாடி பழனிசாமியை நம்பவில்லை என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், ஆளும் கூட்டணியின் அதிருப்தியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருப்பார் என்றும் அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் அதிமுகவின் வாக்குவங்கி 10 சதவீதம் குறைந்திருக்கிறது என்பதையும் எடப்பாடி பழனிசாமியும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். 2019, 2021, 2024 ஆகிய தேர்தல்களில் 46 % அளவுக்கு அதிமுக வாக்குவங்கியை இழந்திருக்கிறது. மீண்டும் வாக்குவங்கியை கட்டமைப்பதில் உள்ள சவால்களை எடப்பாடி பழனிசாமி உணர்ந்திருப்பதாக அவரது கட்சியினர் கூறுகின்றனர்.

மீளுவதைப் பற்றி எடப்பாடி சிந்திப்பாரா?:ஓபிஎஸ் அணி, டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற தனி கட்சி என அதிமுக பிளவு பட்டுக் கிடக்கிறது. எக்காரணத்தைக் கொண்டும் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க மாட்டேன் என்று மீண்டும் மீண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்திக் கூறி வருகிறார். இப்படி ஒரு நிலையில் எடப்பாடி பழனிசாமி அனைவரையும் ஏற்றுக் கொண்டு கட்சியை வீழ்ச்சியில் இருந்து மீட்பாரா? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

1987 ஆம் ஆண்டு எம்ஜிஆர் உயிரிழந்த நிலையில் பிரிந்திருந்த ஜானகி, ஜெயலலிதா அணிகள் இரண்டு ஆண்டுகளிலேயே அதாவது 1989ஆம் ஆண்டிலேயே ஒன்றிணைந்தன. ஆனால், ஜெயலலிதா மறைந்து ஏறக்குறைய 8 ஆண்டுகளுக்குப் பிறகும் பிரிந்த தலைவர்கள் இன்னும் ஒன்று சேரவில்லை. இடையில் பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் இணைந்ததாக சொன்ன ஓ.பன்னீர்செல்வம் பின்னர் மீண்டும் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அதிமுகவில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரைப் போல தமிழ்நாடு முழுமைக்குமான ஒரு தலைவர் அதிமுகவில் இல்லை என்ற குறைபாடு இருப்பதையும் மறுப்பதற்கு இல்லை. எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர், அவர்களுக்காகவே அதிகம் சிந்திக்கிறார் ஆட்சியில் இருக்கும்போது கொங்கு மண்டலத்துக்கான திட்டங்களையே அதிகம் செயல்படுத்தினார் என்ற குறையும் அவர் மீது உள்ளது. இப்படி குறைகளுடன் பயணிக்கும் அதிமுக 53 ஆவது ஆண்டை கொண்டாடும் இந்த தருணத்திலாவது மீளுவதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details