விழுப்புரம்:நாடாளுமன்றத் தேர்தல் எனும் 'தேர்தல் திருவிழா' நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் வரும் ஏப்.19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. அனைத்து அரசியல் கட்சியினரும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே தீவுத்திடலில் கள்ளக்குறிச்சி வேட்பாளர் குமரகுரு மற்றும் விழுப்புரம் (தனி) தொகுதி வேட்பாளர் பாக்யராஜ் இருவருக்கும் ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.
அப்போது மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "தமிழ்நாட்டில் வாழும் மக்களுக்கு மத்தியில் ஆளும் மோடி அரசாலும், மாநிலத்தை ஆளும் மு.க.ஸ்டாலின் அரசாலும் எந்த நன்மையும் இல்லை. இந்தியாவில் அதிகம் ஜிஎஸ்டி (GST) வரி கட்டும் இரண்டாம் மாநிலம் தமிழ்நாடு. ஆனால், மத்திய அரசு எந்த ஒரு நிதியும் தராமல் தமிழ்நாட்டினை வஞ்சிக்கிறது. தமிழ்நாட்டினை மூன்று வருடம் ஆளும் திமுகவினாலும் எந்த பலனும் இல்லை.
தமிழ்நாட்டிற்கு தற்போது 4 முதலமைச்சர்கள், அதாவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், சபரீசன் இவர்கள் 4 பேர் தான் தமிழ்நாட்டை ஆளுகின்றனர். மு.க.ஸ்டாலின் ஒரு பொம்மை முதலமைச்சர் எனக் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், நேற்று முன்தினம் விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடந்த பிரச்சாரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், '2019-ல் பாமக மட்டும் இல்லையென்றால், பழனிசாமி ஆட்சி கவிழ்ந்திருக்கும்' என தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, 'அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளது அதிமுக போட்ட பிச்சை' என பதிலடி கொடுத்தார்.
மேலும், மு.க.ஸ்டாலின் இதற்கு முன்னர் ஒரு பெட்டியை எடுத்துக் கொண்டு மக்களிடையே சென்று உங்களுடைய குறைகளை இதில் எழுதி போடுங்கள் என வீதி வீதியாகச் சென்றார். அவ்வாறு மக்களும் தங்கள் குறைகளை எழுதி போட்டனர். தற்போது அந்த பெட்டி எங்கே உள்ளது என்று யாருக்கும் தெரியவில்லை. அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி, அவருக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்? அதிமுக என்பது ஒரு 'எஃகு கோட்டை'. அதிமுக என்னும் இரும்புக்கோட்டையை எப்படியாவது கலைத்து விடலாம் என்று எண்ணினார்கள். அவர்கள் நினைத்தது எதுவும் இன்றுவரை நடக்கவில்லை.
திமுகவில் ஊழல்வாதிகளும், மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பவர்களும் தான் அதிகம். எடுத்துக்காட்டாக செந்தில் பாலாஜி தற்போது சிறையில் உள்ளார். மற்றொரு அமைச்சர் நீதிமன்ற வாசலை நோக்கி நடந்து கொண்டிருக்கிறார். அதிமுகவில் மட்டுமே கிளைச் செயலாளராக இருந்து தற்போது பொதுச்செயலாளராக ஆக முடியும். ஆனால், திமுகவில் அப்படி இல்லை கருணாநிதி, அவருடைய மகன் ஸ்டாலின், அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின், அதற்கு பிறகு உதயநிதி மகன் இன்பநிதி? ஆனால் உதயநிதியால், ஒரு நாளும் தமிழக முதலமைச்சராக ஆக முடியாது.
தமிழகம் மக்கள் திமுக செய்து வரும் அனைத்து அட்டூழியங்களையும், ஊழல்களையும் கவனித்துக் கொண்டு தான் வருகிறார்கள். மக்கள் ஒரு பொழுதும் அவர்களை நம்ப மாட்டார்கள். ஆகையால், நம்முடைய குரல் ஓங்க வேண்டும், அதற்கு பாக்கியராஜ் மற்றும் குமரகுரு ஆகிய இருவரையும் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி அவர்களுடைய குரலை ஓங்கச் செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: LIVE: விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்! - EPS ELECTION CAMPAIGN