ராணிப்பேட்டை:அரக்கோணம் நகராட்சி கூட்டத்தில் 'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்' என்று முத்துராமன் நடித்த திரைப்படத்தின் பாடலை நகராட்சி ஊழியர் பாடியதால், ஆத்திரமடைந்த அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகராட்சியின் நகர்மன்ற சாதாரணக் கூட்டம், தலைவர் லட்சுமி பாரி தலைமையில் நேற்று (மார்ச் 15) நடைபெற்றது. இந்த நகராட்சி கூட்டம் மாலை 4.30 மணிக்கு நடைபெறுவதாக கவுன்சிலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு இருந்ததால், அதிமுக கவுன்சிலர்கள் மாலை 4.30 மணிக்கு நகர்மன்ற கூட்டத்தில் வந்து அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நகராட்சி தலைவர் மற்றும் திமுக கவுன்சிலர்கள் வருவதற்கு காலதாமதம் ஆகிய நிலையில், நகராட்சி எலக்ட்ரீசியன் ஒருவர் திடீரென நகர்மன்ற கூட்டத்தில் எழுந்து நின்று, 'நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்தில் வரும் முத்துராமன் பாடிய 'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை..' என்ற பாடலை மைக்கில் பாடிக் கொண்டிருந்தார்.
நகர்மன்ற கூட்டத்தில் குறித்த நேரத்திற்கு நகராட்சி தலைவர் மற்றும் திமுக கவுன்சிலர்கள் வராத நிலையில், இவ்வாறு பாடல் பாடியதை கவனித்த அதிமுக கவுன்சிலர்கள் ஆத்திரம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து, நகராட்சி தலைவர் லட்சுமி பாரி மற்றும் திமுக கவுன்சிலர்கள் நகர்மன்ற கூட்டத்திற்கு மாலை 5 மணிக்கு வந்தனர்.