சென்னை:பெண்களுக்கு எதிராக பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்தத் தவறிய திமுக ஆட்சியைக் கண்டித்து, அதிமுக சார்பில் நாளை (டிசம்பர் 27) வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மாணவிக்கு பாலியல் வன்கொடுமை அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில், அதிமுகவினர் இன்று (டிசம்பர் 26) வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல்:இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக அரசு பதவியேற்ற நாள் முதலே, தமிழகத்தில் பெண்கள், சிறுமிகள், வயதானோர் உள்ளிட்ட பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு சட்டம் - ஒழுங்கு அடியோடு குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டது. கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க:அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்: கைதான நபருக்கு மாவு கட்டு - நடந்தது என்ன?
தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்திலேயே மாணவிக்கு பாலியல் கொடூரம் நிகழ்ந்திருப்பது வெட்கக் கேடானது. பெண்கள் படிப்பு மற்றும் பணியிடங்களில்கூட பாதுகாப்பாக இருக்க முடியாத அளவிற்கு தமிழ் நாட்டில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது.
திமுக ஆட்சியில் பல்வேறு மாவட்டங்களில் பெண்கள் மீதான பாலியல் வன் கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 6 வயது சிறுமி முதல் 60 வயதைக் கடந்த பெண்கள் வரை யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழ்நிலை திமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ளது. காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், சட்டப்படி உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தமிழக காவல் துறைக்கு முழு சுதந்திரத்தை வழங்கவில்லை.
போராட்டம் அறிவிப்பு:பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளை கட்டுப்படுத்தத் தவறிய, சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய திமுக ஆட்சியைக் கண்டித்து அதிமுக சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும், மக்கள் அதிகம் கூடும் கழக அமைப்பு ரீதியான மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள, நாளை (டிசம்பர் 27) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெறும்.
இதையும் படிங்க:கைது செய்யப்பட்ட ஞானசேகரன் அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் இருப்பது எப்படி? -அமைச்சர் ரகுபதி விளக்கம்!
திமுக ஆட்சியைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக்கண்டன ஆர்ப்பாட்டங்களில் அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொள்ள வேண்டும். மேலும், பெண்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மகளிர் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.