தேனி:ஆண்டிபட்டி அருகே உள்ள ஒக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் குருசாமி. இவர் அசாம் மாநிலத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், இவரது மனைவி பாண்டீஸ்வரி மற்றும் 6 வயது மகள் அர்ச்சனா ஆகியோர் சொந்த ஊரான ஒக்கரைபட்டியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு சிறுமி அர்ச்சனா, அம்மை நோயால் பாதிக்கப்பட்டு, தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிறுமியின் உடல்நிலை மோசமாக இருப்பதால், அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறுத்தியைத் தொடர்ந்து, சிறுமி தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் சிறுமியின் குடும்பத்தினர் தங்களது ஊருக்கு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று, பின்பு அங்கிருந்து நேற்று இரவு (பிப்.8) ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட சிறிது நேரத்தில், சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு உடனடியாக முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என குற்றம் சாட்டி சிறுமியின் தாய் பாண்டீஸ்வரி மற்றும் உறவினர்கள் சிறுமியின் உடலுடன் மருத்துவமனை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.