திருச்சி:மறைந்த முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திருச்சி மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் மரக்கடை பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக, அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளரும், திரைப்பட நடிகையுமான விந்தியா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, “அதிமுக என்றும் மக்கள் குடும்பம் போல் உள்ளது. அதை பிரிக்க நினைப்பவர்களுக்கும், அழிக்க நினைப்பவர்களுக்கும் இந்த தேர்தலில் பாடம் புகட்டுவோம். இரட்டை இலை சின்னம் மக்கள் சின்னம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அதிமுகவை வெற்றி பெறச் செய்து, திமுகவை விரட்டியடிப்பார்கள். தமிழக மக்களையும், அதிமுக கட்சியையும் வழி நடத்த தெரிந்த ஒரு நல்ல தலைவர் எடப்பாடி பழனிசாமி.
சபாநாயகர் பேச விடாமல் தடுக்கிறார்:சட்டப்பேரவை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய். சட்டப்பேரவையில் திட்டம் என்ற பெயரில், மட்டமாக எதையாவது பேசுகிறார்கள். அதை எதிர்த்து எதிர்கட்சிகள் கேள்வி கேட்டால், சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு பேச விடாமல் தடுக்கிறார்.
வாரிசு கூட்டத்தால் இயங்கும் கட்சி:சட்டப்பேரவையில் உள்ள திமுகவினரெல்லாம் யார் என்று பாத்தால், கருணாநிதியின் மகன், ஸ்டாலினின் மகன், ஐ.பெரியசாமியின் மகன், டி.ஆர்.பாலுவின் மகன், பொய்யாமொழியின் மகன், நாடாளுமன்றத்தில் பார்த்தால், கருணாநிதியின் மகள், தங்கபாண்டியனின் மகள், முரசொலி மாறனின் மகன், ஆற்காடு வீராசாமியின் மகன், துரைமுருகன் மகன் என வாரிசு கூட்டத்தால் இயங்கும் கட்சியாக திமுக செயல்படுகிறது.
பட்ஜெட்டில் ஊழல்:திமுக மூத்த நிர்வாகிகளின் வாரிசுகள் சட்டமன்ற உறுப்பினர் ஆகவும், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகவும் பதவியில் உள்ளனர். பொய்யான பல கம்பி கட்டும் கதைகளைச் சொல்லி, திமுகவினர் மக்கள் மனதை குழப்பி ஆட்சியைப் பிடித்துள்ளனர். அதிமுக ஆட்சியில் பட்ஜெட் தாக்கல் செய்தால், தமிழகமே திரும்பிப் பார்க்கும் நிலை ஏற்படும். அதில் மக்களுக்கான நலத்திட்டங்கள் அதிகமாக இடம்பெறும். ஆனால், திமுக தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஊழல் மட்டும்தான் இருக்கிறது.