சென்னை: நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நடிகை காயத்ரி சாய் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கை முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் தமிழக அரசின் பெயரைப் பயன்படுத்தி திரும்பப் பெறச் சொல்லி நடிகர் எஸ்.வி சேகர் தன்னை மிரட்டுவதாக, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக முதலமைச்சருக்கு பாதிக்கப்பட்ட நடிகை காயத்ரி புகார் அளித்துள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சருக்கும், அவரது மகன் உதயநிதிக்கும் அனுப்பியுள்ள புகாரில், நடிகர் எஸ்.வி.சேகர், தன்னை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, பிரபல பத்திரிகையாளர் மீது தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை வாபஸ் பெறச் சொல்லி தமிழக அரசு தன்னை நாடியதாகக் கூறி, தன்னை வற்புறுத்துவதாக அந்த புகாரில் பாதிக்கப்பட்ட நடிகை தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக முதலமைச்சர் அலுவலகத்தின் பெயரைப் பயன்படுத்தி தன்னை தொலைபேசி வாயிலாக மிரட்டிய நடிகர் எஸ்.வி.சேகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனது மனுவில் நடிகை காயத்ரி சாய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எஸ்.வி.சேகர் தொலைபேசியில் பேசிய உரையாடலையும் நடிகை காயத்ரி சாய் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
சரித்திரப் பதிவேடு குற்றவாளி மீண்டும் கைது: சென்னை ஆயிரம் விளக்கு பகுதி சரித்திரப் பதிவேடு குற்றவாளியான தமிழ்ச்செல்வன் என்பவர் நேற்று காலை கிரீம்ஸ் சாலை வழியாக நடந்து சென்ற சிறுமியிடம் குடிபோதையில் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமி தன்னுடைய உறவினரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். பின்னர், சிறுமியின் உறவினர்கள் மது போதையில் இருந்த தமிழ்ச்செல்வனிடம் வந்து விசாரித்ததாகச் சொல்லப்படுகிறது.
அதற்கு தமிழ்ச்செல்வன் அவர்களையும் ஆபாசமாகப் பேசி தாங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் உறவினர்கள் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில் தமிழ்ச்செல்வனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.