தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீண்டும் காமெடியன் ரோல்? சூரி அளித்த ‘நச்’ பதில்! - Actor Soori

Actor Soori: சென்னையில் கலைஞரின் கண்காட்சியகத்தை பார்வையிட்ட நடிகர் சூரி, நவீன தொழில்நுட்பத்தில் கலைஞரின் வீடியோக்களை பார்ப்பதன் மூலம் அவருடன் நிஜ வாழ்க்கையில் வாழ்ந்த அனுபவத்தை கொடுக்கிறது எனக் கூறினார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 8, 2024, 6:28 PM IST

Updated : Jun 8, 2024, 8:07 PM IST

கலைஞர் உருவசிலையுடன் அமைச்சர்கள் மற்றும் நடிகர்கள் குழு புகைப்படம்
கலைஞர் உருவசிலையுடன் அமைச்சர்கள் மற்றும் நடிகர்கள் குழு புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் திறந்து வைக்கப்பட்டுள்ள “காலம் உள்ளவரை கலைஞர்” என்ற நவீன கண்காட்சியகத்தை, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திரைப்பட நடிகர்கள் சூரி மற்றும் அஜய் ரத்னம் ஆகியோர் பார்வையிட்டனர்.

நடிகர் அஜய் ரத்னம், சூரி பேட்டி (credits - ETV Bharat Tamil Nadu)

மேலும், கண்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள கலைஞரின் உருவச்சிலை அருகில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சேகர்பாபு மற்றும் திரைப்பட நடிகர்கள் சூரி, அஜய் ரத்னம் ஆகியோர் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து நடிகர் அஜய் ரத்னம் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், "கலைஞர் என்பவர் ஒரு சரித்திரம், நவீன தொழில்நுட்பத்தில் பிரமாண்டமாக இந்த கண்காட்சியை அமைத்துள்ளனர். இந்த கண்காட்சியின் மூலம் கலைஞரைப் பற்றிய வரலாற்றை இந்த காலத்து இளைஞர்கள் தெரிந்து கொள்ளலாம்.

தமிழக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களைக் கொண்டு வந்ததன் மூலம் தாய் 8 அடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாய்கிறது. திமுக அரசு மக்களுக்கு நல்லது செய்வதன் காரணமாகவே, தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளையும் வெற்றி பெற்றுள்ளது" என்றார்.

இதைத் தொடர்ந்து நடிகர் சூரி செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், “தமிழக அரசுக்கு எனது வாழ்த்துக்கள். ஒருவரின் பிறந்தநாளை ஒரு நாள் கொண்டாடலாம். ஆனால், ஒரு வருடம் கொண்டாடி வருவதற்கு தகுதியானவர் கலைஞர் தான். கலைஞரின் வாழ்க்கை பிறப்பு முதல் இறப்பு வரை போராட்டமாகத் தான் அமைந்தது.

நான் உட்பட பல பேர் கலைஞரின் வாழ்க்கை வரலாற்றில் தெரியாத பல தகவல்களை இந்த கண்காட்சியகத்தில் பார்த்து தெரிந்து கொள்ள முடிகிறது. மேலும், இந்த கண்காட்சியகம் நவீன தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பான ஒன்று. நவீன தொழில்நுட்பத்தில் கலைஞரின் வீடியோக்களை பார்ப்பதன் மூலம், அவருடன் நிஜ வாழ்க்கையில் வாழ்ந்த அனுபவத்தைக் கொடுக்கிறது.

பூமி இருக்கும் வரை கலைஞரின் புகழ் இருக்கும். கருடன் திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பியபோது, இளைஞர்கள், பெண்கள் என குடும்பங்கள் சேர்ந்து கருடன் திரைப்படத்தை பார்த்துக் கொண்டாடி வருகின்றனர். திரையரங்கில் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது

விடுதலை இரண்டாம் பாகம் குறித்து கேள்வி எழுப்பிய போது, தன் நடிப்பில் தயாராகியுள்ள விடுதலை இரண்டாம் பாகம் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக உள்ளது. அதற்கும் மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நடிகர் சூரியை மீண்டும் காமெடி கதாபாத்திரத்தில் திரையில் பார்க்க முடியுமா என்று கேள்வி எழுப்பிய போது, நான் ஒரு நடிகன். எனவே, எனக்கு எந்த ரோல் கொடுத்தாலும் நான் நடிப்பேன்" என்றார்.

இதையும் படிங்க:ராமோஜி ராவ்-க்கு பாரதா ரத்னா விருது வழங்க வேண்டும் - இயக்குநர் ராஜமௌலி வலியுறுத்தல்! - Ramoji Rao death

Last Updated : Jun 8, 2024, 8:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details