சென்னை: சென்னையில் கடந்த சனிக்கிழமை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' புத்தக வெளியீட்டு விழாவில், நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட அதனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.
இந்த விழா மேடையில், பேசிய நடிகர் ரஜினிகாந்த், மூத்த அமைச்சர்களை சமாளிப்பது மிக கடினம், குறிப்பாக அமைச்சர் துரைமுருகன், கருணாநிதி கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டியவர் என அமைச்சர் துரைமுருகன் குறித்து நகைச்சுவையாக பேசினார். அப்போது, முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட ஒட்டுமொத்த அரங்கத்தில் இருந்தவர்களும் குளுகுளுங்கி சிரித்தனர்.
இது தொடர்பாக நேற்று வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த துரை முருகனிடம், ரஜினிகாந்தின் பேச்சு தொடர்பாக கருத்து கேட்கப்பட்டது, அப்போது,"பல்லு போன நடிகர்களால் இளைஞர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது" என கடுமையான தொனியில் விமர்சனம் செய்தார். அமைச்சர் துரை முருகனின் இந்த பேச்சு திமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.