சென்னை: கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் உள்பட 7 பேரை, 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், மகன் சிறைக்கு செல்லும் முன், நீதிமன்ற வளாகத்தில் நின்றுக்கொண்டிருந்த மன்சூர் அலிகான் வேன் அருகில் காவல்துறை வாகனம் அருகில் சென்று மகனுக்கு புத்திமதி கூறியுள்ளார்.
மகன் சிறைக்கு செல்லும் முன், மன்சூர் அலிகான் வேனை சுற்றி வந்து, “கஞ்சா எல்லாம் அடிக்கக் கூடாது. ஏன் தப்பு பண்ணுற. தைரியமா இரு; புத்தகம் எல்லா படி. நிறைய புத்தகங்கள் படி. தெம்பா, தைரியமாக இரு, ஏன் தப்பு பண்ற, கஞ்சா குடிச்சா கவர்மெண்ட் அரெஸ்ட் பண்ணும் தெரியாதா? சாப்டியா” என்று கேட்டுள்ளார்.
மன்சூர் அலிகான் பேட்டி
தொடர்ந்து நிதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கஞ்சா வியாபாரிகளிடம் என் மகன் நம்பர் இருந்ததாக தற்போது என் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். என் தொலைப்பேசியிலும் பல நடிகைகளின் நம்பர் உள்ளது. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போதைப்பொருள் எப்படி கிடைக்கிறது. டாஸ்மாக்கை ஒழியுங்கள்.
மன்சூர் அலிகான் பேசிய காணொளி (ETV Bharat Tamil Nadu) மதுவை ஒழிக்க வேண்டும் என நான் எடுத்த படத்தை வெளியிட அனுமதிக்கவில்லை. போதஒ பொருள் நடமாட்டத்தை அரசு சட்டத்தின் மூலமாக தடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு டாஸ்மாக்கை ஒழிக்க வேண்டும். தப்பு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும்,” என்று ஆதங்கத்துடன் பேசினார்.
போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிப்பதற்காக சென்னையில் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டு, போதை பொருள் கடத்தலை தவிர்க்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் மகன் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கஞ்சா வழக்கு
கைது செய்யப்பட்டவர்கள் (ETV Bharat Tamil Nadu) சென்னை ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய பகுதியில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படைகள் போலீசார், பாரிசாலை இபி பூங்கா அருகே கடந்த நவ. 03 ஆம் தேதி போதைப் பொருள் விற்பனைக்காக வந்த அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (21) என்ற கல்லூரி மாணவனை கைது செய்து விசாரனை மேற்கொண்டுள்ளனர். இதில், அவரிடமிருந்து 17 எல்.எஸ்.டி ஸ்டாம்ப் போதைப் பொருளும், மூன்று கிராம் ஓ.ஜி. கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க:புஷ்பா 2 சிறப்புக் காட்சி: கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழப்பு!
தொடர்ந்து நடத்திய விசாரணையில், 'ரெடிட்' ஆன்லைன் ஆப் மூலமாக போதைப் பொருளை வாங்கி பயன்படுத்தியதோடு, அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. கார்த்திகேயன் கொடுத்த தகவலின் படி, மந்தைவெளியைச் சேர்ந்த அரவிந்த் பாலாஜி( 20), கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த வத்சல் (21), மறைமலை நகரை சேர்ந்த திரிசண் சம்பத் (20), ஆருணி (20) உள்ளிட்ட 10 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 94 எல்.எஸ்.டி ஸ்டாம்ப், 48 எம்.டி.எம்.ஏ போதை மாத்திரை, 700 கிராம் ஓ.ஜி கஞ்சா, ஐந்து செல்போன் ஆகியவர்றை பறிமுதல் செய்துள்ளனர்.
மன்சூர் அலிகான் மகன் கைது:
கைது செய்யப்பட்டவர்கள் (ETV Bharat Tamil Nadu) இந்த நிலையில் கைது செய்யப்பட்ட கார்த்திகேயனின் மொபைல் நம்பரை ஆய்வின் அடிப்படையில், நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் மற்றும் அவரது நண்பர்கள் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, நேற்று முன்தினம் (டிச.03) காலை நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 7 நபர்களை அண்ணா நகர் துணை ஆணையர் தனிப்படை போலீசார், ஜெ.ஜெ நகர் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மருத்துவ சோதனையில் உறுதி:
ஏழு பேருக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதில், பரிசோதனை முடிவில் அலிக்கான் துக்ளக், கார்த்திகேயனிடமிருந்து போதைப் பொருட்களை வாங்கி பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. மேலும், அலிகான் துக்ளக் அவரது நண்பர்களுடன் இணைந்து பிற நண்பர்களுக்கும் வாங்கி கொடுத்ததும் தெரியவந்ததுள்ளது.
இதனையடுத்து நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்(26) மற்றும் அவரது நண்பர்களான புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சையது ஷாகி(22), முகமது ரியாஸ் அலி (28), பாசில் அகமது(26), குமரன், முகேஷ், சந்தோஷ் என மொத்தம் 7 நபர்களை போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் ஜெ.ஜெ நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து, துக்ளக் உள்ளிட்ட கைதான நபர்களை அம்பத்தூரில் உள்ள நீதிமன்றத்தில் போலீசார் அஜர்படுத்தியுள்ளனர். வழக்கை விசாரித்த நீதிபதி துக்ளக் அலிகான் உள்ளிட்ட 7 பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டுள்ளனர். உத்தரவின் பேரில், 7 பேரையும் நீதிமன்றத்தில் இருந்து வேனில் ஏற்றியுள்ளனர்.