தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சையில் அதிரடி ரெய்டு.. 760 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்! - thanjavur drug smuggling

Thanjavur drug seize: தஞ்சை மாவட்டத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 760 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 14.5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் போதைப் பொருள் 'ரெய்டு'
தஞ்சை மாவட்டத்தில் போதைப் பொருள் 'ரெய்டு'

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 14, 2024, 6:25 PM IST

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் போதைப்பொருள் சோதனை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டதன் பேரில். அனைத்து காவல் உட்கோட்ட பகுதிகளிலும் டிஎஸ்பிகள் மேற்பார்வையில், கடந்த மார்ச் 12ஆம் தேதி இரவு அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அதில், திருக்காட்டுப்பள்ளி காவல் ஆய்வாளர் ஜெகதீசன் மற்றும் போலீசார், விண்ணமங்கலம் பகுதியில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது, அந்த வழியாக இரவு நேரத்தில் சந்தேகத்திற்குரிய முறையில் வந்த ஆம்னி வாகனத்தை மடக்கிப் பிடித்து சோதனை செய்துள்ளனர்.

அந்த சோதனையின் போது. அந்த வாகனம் நடுக்காவேரியைச் சேர்ந்த காளிராஜன் என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரிய வந்துள்ளது. இந்த வாகனத்தில் சட்டத்திற்கு புறம்பாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்கள் சுமார் 32 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 ஆம்னி வேன்கள், ஒரு லாரியும், ரூ.26 ஆயிரத்து 200 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து காளிராஜனை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், திருவையாறு பகுதியில் காவல் ஆய்வாளர் ஷர்மிளா அந்த வழியாக வந்த 4 சக்கர வாகனத்தை மறித்து சோதனை செய்தபோது, அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ் மற்றும் பான் மசாலா என மொத்தம் 297 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.3,68,540 விற்பனை தொகையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த புகையிலை பொருட்களை எடுத்து வந்த நான்குசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், நடுக்காவேரியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரை கைது செய்தனர்.

மேலும், அய்யம்பேட்டை காவல் ஆய்வாளர் ஐஸ்வர்யா மற்றும் தனிப்படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் ஆகியோர் தலைமையிலான போலீசார், வடக்கு மாங்குடி அருகே சோதனை நடத்தி உள்ளனர். இந்த சோதனையின்போது, அங்கு சட்டத்திற்குப் புறம்பாக விற்பனைக்காக வைத்திருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ், பான் மசாலா போன்ற 431 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 10 லட்சத்து 49 ஆயிரம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தஞ்சை டவுன் கரம்பை பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ஒரே நாளில் மூன்று இடங்களில் 760 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 4 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 14 லட்சத்து 43 ஆயிரத்து 740 ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:“ஏழு ஆண்டுகளுக்கு மேலாக ஏன் இன்னும் பணிகள் முடிக்கப்படவில்லை?” - நெடுஞ்சாலை விவகாரத்தில் உயர் நீதிமன்றம் அதிருப்தி!

ABOUT THE AUTHOR

...view details