தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம்; பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தல்! - Tamil puthalvan scheme

Tamil Puthalvan Scheme: தமிழ் புதல்வன் திட்டம் மூலம் மாணவர்களுக்கு மாதம் 1,000 உதவித் தொகை வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தகுதியான மாணவர்கள் ஆதார் எண் வைத்திருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் கோப்புப்படம்
மாணவர்கள் கோப்புப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 24, 2024, 7:11 PM IST

சென்னை: அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு கல்லூரி படிப்பின் போது மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கு தமிழ் புதல்வன் திட்டம், இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதனிடையே, அதன் பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், இத்திட்டத்திற்கு விண்ணபிக்க தேவையான ஆவணங்களை அரசு வெளியிட்டதோடு, மாணவர்கள் ஆதார் எண் வைத்திருக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், இந்த தகவலை அனைத்து மாணவர்களுக்கும் தெரியும் வகையில் கல்வி நிறுவனங்கள் விளம்பரப்படுத்தி, அவர்களை ஆதார் மையங்களுக்குச் சென்று ஆதார் எண் எடுக்க அறிவுறுத்த வேண்டும் என்று வழிகாட்டியுள்ளது.

மேலும், ஆதார் மையங்கள் இல்லாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆதார் மையம் அமைத்து அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உயர் கல்விக்குச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கும் இந்த திட்டம், அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் புதல்வன் திட்டம் என்றால் என்ன? முன்னதாக இந்த திட்டம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கையில், "அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று, உயர் கல்வியில் சேரும் மாணவர்கள் அவர்களது பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.

இந்த புதிய திட்டத்தின்‌ மூலம்‌ சுமார்‌ 3 லட்சம்‌ கல்லூரி மாணவர்கள்‌ பயனடைவர்‌. இத்திட்டத்தை நிறைவேற்றிட 360 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கப்பட்‌டுள்ளது" எனத் தெரிவித்திருந்தார். முன்னதாக, தமிழக அரசு அறிமுகப்படுத்திய புதுமைப் பெண், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களைத் தொடர்ந்து 'தமிழ் புதல்வன்' திட்டமும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:மக்களுடன் முதல்வர் திட்டத்திற்காக அரசுப் பள்ளிக்கு விடுமுறையா? நத்தம் அருகே நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details