நீலகிரி:நீலகிரியில் சிறுத்தை தாக்கியதில் தேயிலைத் தோட்ட பணிக்காகச் சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறை மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகேயுள்ள எடக்காடு பகுதி முக்குருத்தி, அவலாஞ்சி வெளிமண்டல வனப்பகுதியில் அமைந்துள்ளது. அப்பகுதி சிறுத்தை, புலி, மான், வரையாடு உள்ளிட்ட வனவிலங்குகளின் வசிப்பிடமாக இருந்து வருகிறது. சமீப காலமாக வனப்பகுதியில் இருந்து சிறுத்தை, புலி, கரடி போன்ற விலங்குகளின் நடமாட்டமானது எடக்காடு அருகேயுள்ள அறையட்டி கிராமம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகரித்துக் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று (ஜனவரி 3) அறையட்டி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற இளைஞர் தேயிலைத் தோட்டத்திற்கு பணிக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த சிறுத்தை இளைஞரைத் தாக்கியதாகவும், அதனால் அவர் உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.