கரூர்: கரூர் அடுத்த மேலப்பாளையம் ஊராட்சி வடக்குபாளையம் பகுதியில் வசிப்பவர் விவசாயி ரவிச்சந்திரன். இவர், அவரது வீட்டின் முன்பாக தனது எக்ஸ்எல் எனப்படும் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்துள்ளார். இதனைக் கண்ட 2 இளைஞர்கள், இருசக்கர வாகனத்தை தள்ளிச் சென்று திருட முயற்சி செய்துள்ளனர்.
அப்போது வீட்டிலிருந்த வளர்ப்பு நாய் குரைத்ததில், இருசக்கர வாகனத்தை இருவர் திருடிக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, வாகனத்தைத் திருடிக் கொண்டிருந்ததைக் கண்ட உரிமையாளர் கூச்சலிட்டதைப் பார்த்த இருவரும், வாகனத்தை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த டூவிலரை திருட முயற்சி செய்யும் வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu) அதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரை விரட்டிய போது, அதில் ஒருவர் மட்டும் பொதுமக்களிடம் வசமாகப் பிடிபட்டுள்ளார். மற்றொரு இளைஞர் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, சிக்கிய இளைஞரை அப்பகுதியினர் மின்கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.
பின்னர், அந்த ஊர் மக்கள் பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் அந்த இளைஞரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பிடிபட்ட நபர் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கொளந்தாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த யுகேந்திரன் என்பதும், தப்பிச் சென்ற மற்றொரு இளைஞர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும், இவர்கள் இருவரும் கரூரில் உள்ள ஒரு தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் லோடுமேனாக வேலை பார்த்து வருவதும், இருசக்கர வாகனத்தை திருட முயற்சி செய்து கையும் களவுமாகச் சிக்கிய யுகேந்திரன் மீது திருச்சி மாவட்டத்தில் உள்ள கோட்டை காவல் நிலையத்தில் ஏற்கனவே 2 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, யுகேந்திரனைக் கைது செய்த பசுபதிபாளையம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மேலும், மற்றொரு நபரைத் தேடி வருகின்றனர்.
தற்போது, வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை இளைஞர்கள் திருட முயற்சி செய்வது தொடர்பான காட்சிகள் அருகே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களை வீட்டின் முன்பு நிறுத்துவதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: நர்சிங் மாணவியிடம் சில்மிஷம்? - அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?