திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரெட்டிதோப்பு, திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்த குப்புசாமி (39) என்பவர், கடந்த ஜூன் 22ஆம் தேதி அன்று வாணியம்பாடியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது மனைவியுடன் ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மின்னூர் அருகே பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், குப்புசாமியின் செல்போனை பிடுங்கிச் சென்றுள்ளனர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த குப்புசாமி மற்றும் அவரது மனைவி காயங்களுடன் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அப்புகாரின் பேரில் ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ஆம்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார், நேற்று (சனிக்கிழமை) வாணியம்பாடி கோனாமேடு பகுதியைச் சேர்ந்த ஜெகன் (20) மற்றும் நூருல்லாபேட்டை விஎம்சி காலனியைச் சேர்ந்த திவாகர் (21) இருவரையும் பிடிக்கச் சென்றனர்.
அப்போது, கோனாமேடு ஜெகனின் அண்ணன் சாய் தீனாவைப் பிடித்து தனது சகோதரர் இருக்கும் இடத்தை கேட்டுள்ளனர். பின்னர் ஜெகனை பிடித்துச் செல்லும் போது, கைது செய்யும் காரணம் குறித்து சாய் தீனா போலீசாரிடம் கேட்டதற்கு தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி, லத்தியால் கடுமையாக அடித்ததாகக் கூறப்படுகிறது.