திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த காக்களூரில் அரசு ஆவின் பால் பண்ணை உள்ளது. இந்த பால் பண்ணையில் இருந்து நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 90 ஆயிரம் லிட்டர் அளவுக்கு பால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று (ஆக.20) வழக்கம்போல் பால் உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வந்தது. அப்போது பால் உற்பத்தியாகி வெளியே வரும்போது அதனை டப்பில் அடுக்கி அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்த கார்த்தி என்பவரது மனைவி உமா ராணி(30) என்பவரின் தலைமுடி எதிர்பாராத விதமாக இயந்திரம் அருகில் உள்ள மோட்டாரின் கன்வேயர் பெல்ட்டில் சிக்கியுள்ளது.
இதனால், உமா ராணியின் தலை மோட்டாரில் சிக்கி ஏற்பட்ட விபத்தில், அவர் சம்பவ இடத்திலேயே அவர் தலை துண்டாகி பலியாகியுள்ளார். பின்னர், இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டிஎஸ்பி கந்தன் தலைமையிலான போலீசார், உமா ராணி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.