தமிழ்நாடு

tamil nadu

நூறு ஆண்டுகள் கடந்தும் அசராத உறுதி.. கரூர் மக்கள் மனதில் அழியா நினைவுகளை பதித்த அமராவதி பாலம்! - Karur Amaravathi Old Bridge

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 21, 2024, 10:50 PM IST

Karur Amaravathi old bridge: கரூர் நகர்ப்பகுதியின் நுழைவாயிலில் அமராவதி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இது குறித்த சுவராசிய தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

நூறு ஆண்டுகள் கடந்த கரூர் அமராவதி ஆற்றுப் பாலம்
நூறு ஆண்டுகள் கடந்த கரூர் அமராவதி ஆற்றுப் பாலம் (Credits - ETV Bharat Tamil Nadu)

கரூர்: 1910 ஆண்டு வரை கரூர், கோவையின் ஒரு பகுதியாகவும், பின்னர் திருச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருந்துள்ளது. அதன் பின்னர், 1996ஆம் ஆண்டு தான் கரூர் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அந்த காலத்தில் கரூரில் காவிரி, அமராவதி ஆகிய இரண்டு ஆறுகளும் வற்றாத ஜீவ நதியாய் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

கரூர் அமராவதி ஆற்றுப் பாலம் (Credits - ETV Bharat Tamil Nadu)

அமராவதி ஆற்றுப் பாலம் உருவான கதை: குறிப்பாக, அமராவதி ஆற்றில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் ஆற்றைக் கடந்து மறுபக்கம் செல்ல மிகவும் சிரமம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் மக்கள் கிராமப்புறங்களில் இருந்து கரூர் நகர் பகுதிக்குச் செல்ல உதவும் வகையில், 1919ஆம் ஆண்டு பாலம ஒன்று கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.

சுமார் ஐந்து ஆண்டுகள் கட்டுமான பணிகளுக்கு பிறகு, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 1924ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி, அப்போதைய சென்னை கவர்னர் விஸ்கவுண்ட் கோஸ்சென் ஹாக்கார்ஸ்ட் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது. மேலும், இந்த பாலத்திற்கு திருச்சிராப்பள்ளி ஜில்லா போர்டு தலைவர் தேசிகாச்சாரி என்பவரது பெயர் சூட்டப்பட்டது.

பின்னர், அந்த பாலம் அமைந்திருந்த பகுதி 'லைட் ஹவுஸ் கார்னர் பாலம்' என்று மக்களால் அழைக்கப்பட்டது. அதன் பின்னர், 2001ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, இந்த பாலத்தின் அருகே புதிய அமராவதி ஆற்றுப்பாலம் கட்டப்பட்டது.

அதன் பின்னர் சில ஆண்டுகளுக்கு ஒரு வழி பாதியாகவும், தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்வதற்கு பழைய அமராவதி ஆற்றுப்பாலத்தில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. பின்னர் இருவழி போக்குவரத்திற்காக புதிய பாலம் கட்டப்பட்டவுடன் அமராவதி ஆற்றுப் பாலம் கரூரின் அடையாளச் சின்னமாக மட்டுமே இருந்தது.

பூங்காவாக மாறிய அமராவதி பாலம்: இதனிடையே, கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில், கரூர் லைட்ஹவுஸ் அமராவதி ஆற்றுப்பாலம் மூடப்பட்டு, நடைபாதை பூங்கா போன்று வடிவமைக்கப்பட்டது. இதற்காக, கரூர் நகராட்சி கரூர் வைஸ்யா வங்கியின் நிதி உதவியுடன் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்பட்டு, 2020ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

கரூர் மாநகரின் நுழைவு வாயிலாக உள்ள லைட்ஹவுஸ் அமராவதி ஆற்றுப் பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்து இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் இந்த பாலத்துடனான நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். மேலும், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பாரம்பரிய அடையாளமாக பாதுகாக்கப்படுகிறது.

இதுகுறித்து கரூரை சேர்ந்த சமூக ஆர்வலர் சதீஷ்குமார் ஈ டிவி தமிழ்நாடு செய்திகளுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், "1924 ஆம் ஆண்டுக்கு முன்னர் விவசாயிகள் வியாபாரத்திற்காக கரூர் நகர் பகுதிக்கு மாட்டு வண்டிகளில் ஆற்றைக் கடந்து சிரமத்துடன் சென்றதையும், பாலம் திறக்கப்பட்ட பிறகு மிக எளிமையாகச் சென்றதையும் பலர் சொல்லிக் கேட்டுள்ளேன்.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் வெறும் சுண்ணாம்பு மற்றும் கற்களின் கலவைகளால் மட்டுமே இந்த பாலம் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த பாலம் 1977, 1987 மற்றும் 1997 ஆகிய மூன்று ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது உறுதியாக நின்றது. நூறு ஆண்டுகள் கடந்தும் அதே வலிமையோடு காட்சி அளிப்பது கரூர் வாழ் மக்களுக்கு மகிழ்வை அளிக்கிறது" எனக் கூறினார்.

இதையும் படிங்க:ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: கூத்தனூர் அரசு தொடக்கப்பள்ளி மீண்டும் திறப்பு! மகிழ்ச்சியில் மாணவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details