தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தருவைகுளம் அருகே அமைந்திருக்கும் பட்டணமருதூர் என்ற மீனவ கிராமத்தில் 'டோலகா ஹரப்பா' நாகரீகத்தைவிட தொன்மையானதாக தென்படும் மணல் கற்களால் வடிவமைக்கப்பட்ட செவ்வக வடிவ கிணற்றையும் அதனை சுற்றியுள்ள இடத்தில் வட்ட வடிவிலான மற்றொறு கிணறு, சிலைகள், சாலைகள் மற்றும்நிறை குடுவைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பட்டணமருதூரில் கண்டெடுக்கப்பட்ட தொன்மையான கிணறு (Video Credit - ETV Bharat Tamilnadu) இதுகுறித்து தூத்துக்குடியைச் சேர்ந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ் கூறுகையில், "தூத்துக்குடி மாவட்டம், பட்டணமருதூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி கள ஆய்வுப் பணியினை மேற்கொண்டபோது மிகவும் தொன்மையான 'டோலகா ஹரப்பா' நாகரீகத்தைவிட தொன்மையானதாக தென்படும் மணல் கற்களால் அடுக்குதல் கட்டுமான முறையில் வடிவமைக்கப்பட்ட கிணற்றினை கண்டறிந்தேன்.
ஆனால், அதன் தொன்மை தெரியாமல் பாதுகாப்பற்று, அது அமைந்துள்ள இடத்தின் உரிமையாளர் உப்பு உற்பத்திக்கு பயன்படுத்தி வருகின்றார். உடனே இதுகுறித்த தகவல்களை, கிராம நிர்வாக அதிகாரி வாயிலாக வருவாய்த் துறை உயர் அதிகாரிகளிடமும், இந்த பகுதியில் கள ஆய்வுகளை மேற்கொண்டுவரும் இந்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல அதிகாரிகளிடமும் பகிர்ந்து ஆவணப்படுத்தியுள்ளேன்.
ஆகவே, இந்த கிணற்றினை உடனடியாக ஆய்வு செய்து வரைபடங்களில் பதிவு செய்து அரசுடைமையாக்கி, பாதுகாக்கப்பட வேண்டிய தொன்மை சின்னமாக அறிவிக்க வேண்டும்.
50 அடி ஆழம் உள்ள வட்டக் கிணறு: இதேபோன்று, தனியார் விரால் வளர்ப்பு பண்ணையாக இருந்த பகுதியிலிருந்து கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி அன்று ஆவணப்படுத்தப்பட்ட சுமார் 40 முதல் 50 அடி ஆழம் உள்ளதாக காணப்பட்ட வட்டக் கிணற்றினையும் ஆய்வு செய்ய வேண்டும். மேலும், அந்தப் பகுதியில் பல்வேறு இடங்களில் குடுவைகள் காணப்படுகின்றன. அந்த குடுவைகளையும் ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும்.
கிபி 200ஆம் நூற்றாண்டு மன்னர் சிலை: இதுமட்டும் அல்லாமல், பண்டைய கால கல்வெட்டாக குதிரையில் மன்னன் வீற்றிருப்பது போலவும் அவனுக்குப் பின்னால் குடைபிடித்து ஒருவர் நிற்பது போலவும் மதுகுடம் ஏந்திய இருவர் பின்னால் இருப்பது போலவும் பழங்காலத்து மணல் கல்வெட்டு சிற்பம் ஒன்று அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டு கோயிலாக பாவித்து அப்பகுதி பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.
மேலும், அதே இடத்தில் பாண்டிய மன்னர் ஒருவர் தனது இரண்டு மனைவிகளை இரண்டு பக்கமும் வைத்த வண்ணம் ஒரு சிலையும் வைக்கப்பட்டுள்ளது. இது கிபி 200ஆம் நூற்றாண்டில் உள்ளதாக கூட இருக்கலாம். எனவே இந்தச் சிலையையும் ஆய்வு செய்ய வேண்டும்.
சேதுபாதை: இந்த பகுதியின் வழியாகத்தான் சேதுபாதை எனும் சாலை ராமேஸ்வரம் முதல் திருச்செந்தூர் வரை சென்றுள்ளது. அதற்கான சுவடுகள் மணல் கற்களால் அமைக்கப்பட்ட சாலைகள் ஆகியவை இன்றும் உள்ளன. எனவே, இதனை எல்லாம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து உண்மை என்ன என்பதை வெளி உலகத்திற்கு கொண்டு வர வேண்டும்.
கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடி: குஜராத் மாநிலத்தில் உள்ள டோலகா ஹரப்பா நாகரிகத்தைவிட தொன்மையானதாக தென்படும் மணல் கற்களால் ஆன கிணறு, சிலைகள், சாலைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தால் இன்னும் பல பண்டைய நாகரிகம் பண்டைய மக்களின் வாழ்வியல் முறை ஆகியவை வெளி உலகத்திற்கு தெரியவரும். 'கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடி எம் தமிழ் குடி' என்பதை இதன் மூலம் நிரூபிக்க முடியும். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க:சென்னை வரும் பாகிஸ்தான் அணி! என்ன காரணம்?