ஈரோடு: பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக பாக முகவர்கள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் திருமன மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், “இந்த கூட்டத்தில் நான் துணைப் பொதுச் செயலாளராக வந்திருக்கிறேன். வேட்பாளராக அல்ல. சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறையைக் கண்டு அஞ்சுகிறார்கள். அவர்களுக்கு அஞ்சாத ஒருவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த தேசத்தைக் காப்பாற்றும் மிகப்பெரிய பொறுப்பை அவர் ஏற்றிருக்கிறார். பாசிச பாஜக ஆட்சியை எதிர்வரும் தேர்தலில் முறியடிக்கும் சக்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமே உண்டு.
தமிழகத்தில் இதற்கு முன்னாள் ஆட்சி செய்த அதிமுகவினர், தமிழக அரசின் கஜானாவை காலி செய்து விட்டுச் சென்றனர். அதன் பிறகு ஆட்சி பொறுப்பேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 3 மாதத்தில் பல்வேறு தொழில் முதலீட்டுகளை தமிழகத்திற்கு கொண்டு வந்தார். இதன் மூலம், ரூ.8 லட்சம் கோடி முதலீடு தொழில் துறையில் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு தொடர்ந்து மாநில அரசுக்கு தரவேண்டிய நிதியை தராமல் காலம் தாழ்த்தி வருகிறது.
31 வயதில் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 33 வயதில் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றேன். ஜனநாயக நாடான இந்தியாவில் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் மிகவும் முக்கியமானது. நேரு, மொரார்ஜி தேசாய், மன்மோகன் சிங், குஜ்ரால் உள்ளிட்ட பிரதமர்கள் கேள்வி நேரத்தில் அமர்ந்திருப்பார்கள். மாநிலத்தின் பிரச்னைகள் குறித்து கேள்வி கேட்கப்படும். உறுப்பினர்கள் கேள்விக்கு சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் பதிலளிப்பார். இல்லையென்றால், பிரதமரே அதற்குரிய விளக்கம் அளிப்பார்.
மன்மோகன்சிங் அமைச்சரவையில் நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது, மாநிலங்களில் மருத்துவ வசதியில்லை என பல்வேறு மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு மத்திய அரசு பணம் மட்டுமே தரும், அந்த பணத்தைக் கொண்டு மாநிலத்தில் சுகாதாரம் வசதி ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நான் கூறினேன்.
நாடாளுமன்றத்தில் நடைபெறும் கேள்வி நேரத்தில் கலந்து கொள்ளாத ஒரே பிரதமர் நமது மோடிதான். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் திமுக நிச்சயம் வெற்றி பெறும். அதற்காக அனைவரும் ஒன்றுபட்டு தேர்தலில் பணியாற்ற வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார்.
இதையும் படிங்க:விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்! குஜராத் பல்கலைக்கழகத்தில் என்ன நடந்தது?