ஈரோடு: நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா, பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலம் ஒன்றியம் அரசூர், செண்பக புதூர், அரியப்பம்பாளையம் ஆகிய கிராமப் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த வகையில், செண்பக புதூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது, பெட்ரோல் விலை உயர்வைக் கண்டிக்கும் விதமாக, இருசக்கர வாகனம் ஏற்றிய அலங்கரிக்கப்பட்ட காளை மாட்டு வண்டியில் ஏறி அமர்ந்து, ஆ.ராசா வாக்கு சேகரித்தார்.
அதனைத் தொடர்ந்து அரசூர் பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, பாஜக அரசைக் கண்டித்து பக்கோடா சுட்டு பொதுமக்களுக்கு வழங்கிய ஆ.ராசா நூதன முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக, பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரிக்க வந்த ஆ.ராசாவுக்கு மேளதாளங்களுடன் பெண்கள் நடனமாடியும், பட்டாசுகள் வெடித்தும் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் மத்தியில் ஆ.ராசா பேசிய போது, “எந்த குற்றச்சாட்டை முன்வைத்தாலும் நாடாளுமன்றத்துக்கு வராத ஒரே பிரதமர் மோடி தான். தேர்தல் பத்திரமாக 45 கம்பெனிகள் 2,000 கோடி ரூபாய் மோடிக்கு கொடுத்துள்ளனர். அதை உச்ச நீதிமன்றம் விசாரித்தால், 35 கம்பெனிகள் நஷ்டத்தில் இயங்கி வருகிறது தெரிய வந்துள்ளது.