சென்னை: தமிழ்நாட்டில் 7 ஆண்டு காலமாக மதச்சார்பற்றக் கூட்டணி தொடர்ந்து வருகிறது எனவும், தேர்தல் களத்தில் நின்று தொடர்ந்து வெற்றியைப் பெற்று வருகிறோம். ஆகவே, இந்த கூட்டணியைப் பொறுத்தவரைக்கும், கொள்கை கூட்டணி மட்டுமல்ல, இது நிரந்தரக் கூட்டணி என்பதை இந்த நேரத்தில் அழுத்தந்திருத்தமாக எடுத்துச் சொல்லி, அதற்கு நீங்கள் எல்லாம் துணை நிற்கவேண்டும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசினார்.
உறுதுணையாக விளங்க வேண்டும்:சென்னை தி.நகர், பாலன் இல்லத்தில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் விடுதலைப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,"நல்லகண்ணு நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுவுடைமை இயக்கத்திற்கும் நூற்றாண்டு, நல்லகண்ணுவிற்கும் நூற்றாண்டு. நம்மைப் பொறுத்தவரையில் இப்படி ஒரு பொருத்தம் யாருக்கும் கிடைத்ததில்லை.
அப்படிப்பட்ட பெரும் வாய்ப்பையும், சிறப்பான வாய்ப்பையும், அரிய வாய்ப்பையும் பெற்றிருக்கக்கூடிய நல்லகண்ணுவை நானும் உங்களோடு சேர்ந்து வாழ்த்துவதற்கு கடமைப்பட்டிருக்கிறேன். நான் வாழ்த்த வரவில்லை. வாழ்த்தை பெற வந்திருக்கிறேன். எல்லோருக்கும் எல்லாம், சமூக நீதி, சமத்துவத்தை நிலைநாட்டிட வேண்டும் என்ற உணர்வோடு, தமிழகத்தில் உங்கள் அன்போடும், ஆதரவோடும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றிக் கொண்டிருக்கக்கூடிய திட்டங்களுக்கெல்லாம், உறுதுணையாக பக்கபலமாக விளங்கிக்கொண்டிருக்கக் கூடியவர் நல்லகண்ணு.