அரியலூர்:பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சிமெண்ட் ஆலை ஊழியர் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கொலையை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் மேற்படி விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே உள்ள பார்ப்பனஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னப்பட்டு (50). இவர் தன் கணவரை பிரிந்த நிலையில் தனது மகனுடன் வசித்து வந்துள்ளார். அன்னபட்டு சமத்துவபுரம் பகுதியில் குத்தகைக்கு நிலம் எடுத்து மக்காச்சோளம் பயிரிட்டு விவசாயம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை மாலை தனது தாயை காணவில்லை என அன்னப்பட்டுவின் மகன், அவர்கள் சோளம் பயிரிட்டுள்ள விவசாய நிலத்திற்கு சென்று தேடிப் பார்த்துள்ளார். அப்போது அன்னபட்டு தலையில் பலத்த ரத்த காயத்துடன் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு மகன் அதிர்ச்சியடைந்துள்ளார்.
தொடர்ந்து இது குறித்து கீழப்பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அன்னபட்டு கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
பின்னர் அவரது உடல், உதற் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து அவரது போனை சோதனை செய்ததில் அவர் சிமெண்ட் ஆலை ஊழியர் பாலமுருகனுடன் பழகி வந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பாலமுருகனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வெட்டிக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து கீழப்பழூர் போலீசார் பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அரியளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தொப்பூரில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து...3 பேர் உயிரிழப்பு! பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!