சென்னை: ஆவடி அருகே வாடகைக்கு கார் எடுத்து வந்து, கார் பழுது பார்க்கும் மெக்கானிக் கடைகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களின் பேட்டரிகளை திருடுவதை வாடிக்கையாக வைத்து வந்துள்ள நபரை, சிசிடிவி காட்சிகளின் அடிப்படியில் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த பேட்டரிகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் முத்தா புதுப்பேட்டை அடுத்த கிழ்கொண்டயார் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் அதே பகுதியில் விநாயக டிராக்டர் பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறார். இவரது கடைக்கு கனரக வாகங்கள், டிராக்டர் போன்றவை வாகனங்கள் பழுது நீக்க வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், கடைக்கு வந்த டிராக்டர்கள், கனரக வாகனங்கள் பராமரிப்பு காரணமாக அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், டிசம்பர் 12ஆம் தேதி வழக்கம்போல தொழிலுக்கு வந்த சுரேஷ் வாகனங்களை பழுது பார்த்து விட்டு இரவு அங்கேயே விட்டு விட்டுச் சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்த போது கனரக வாகனம் டிராக்டர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் இருந்த பேட்டரி திருடு போயிருந்துள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து முத்தா புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பேட்டரி திருடனை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர். அந்த வகையில், வேளச்சேரியைச் சேர்ந்த யாஷின் முகமது என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு உண்மைகள் வெளிவந்துள்ளது.