சென்னை: சென்னை விமான நிலைய ஓடு பாதை பகுதிக்குள் நேற்று மாலை காற்றில் பறந்து வந்த மிகப்பெரிய மஞ்சள் நிற பலூன் ஒன்று விமான நிலைய இரண்டாவது ஓடு பாதையில் வந்து விழுந்தது. கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக இந்த காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்த சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், உடனடியாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் விமான பாதுகாப்பு பிரிவான பி.சி.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு அவசரத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் இரண்டாவது ஓடு பாதைக்கு விரைந்து சென்று, ஓடு பாதையில் கிடந்த சுமார் ஐந்து அடி விட்டமுடைய ராட்சத பலூனை அகற்றினர். அந்த மஞ்சள் நிற ராட்சத பலூன், நீளமான நைலான் கயிறுடன் வந்து விழுந்து கிடந்ததால், பெரிய பலூன் மற்றும் நைலான் கயிறு ஆகியவற்றை பாதுகாப்பாக எடுத்து சென்றனர்.
அதன் பின்பு பலூனை அதிகாரிகள் ஆய்வு செய்த போது, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடந்து வரும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டி விளம்பரத்துக்காக வானில் பறக்க விடப்பட்ட பலூன் என்பது தெரிய வந்தது. அந்த பலூனின் நைலான் கயிறு அறுந்து, காற்றில் பறந்து சென்னை விமான நிலைய ஓடு பாதைக்குள் வந்து விழுந்து உள்ளது என்று தெரிய வந்தது. அந்த நேரத்தில் விமான நிலைய இரண்டாவது ஓடு பாதையில் விமானங்கள் எதுவும் இல்லை.