கோயம்புத்தூர்:கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியின் பேருந்து சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரி நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது. இப்பேருந்தை ரத்தினவேலு என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
பேருந்து பாப்பம்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கோழி தீவனம் ஏற்றி வந்த கனரக லாரி மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 4 மாணவிகள் உட்பட 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இவர்களில் 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அருகில் இருந்தவர்களால் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் போலீசார், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவு விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.