ஈரோடு:இந்தியா முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில், தமிழ்நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பல்வேறு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் தீவிரமாக வாக்குகளைச் சேகரிப்பதற்கு வாக்காளர்களைச் சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வித்தியாசமான பல்வேறு உத்திகளையும் பிரச்சாரத்தில் கையாண்டு வருகின்றனர்.
அந்த வகையில், நீலகிரி தனி தொகுதியில் பாஜக வேட்பாளராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். இதனை அடுத்து, நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் தனது ஆதரவாளர்களுடன் பரப்புரையில் ஈடுபட்டு வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்த நிலையில், சத்தியமங்கலம் மைசூர் சாலையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் உரிய அனுமதி பெறாமல் தேர்தல் விதிமுறைகளை மீறி எல்.முருகன் தலைமையில் 100 பேர் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உமா சங்கருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.