சென்னை:கடலூர் மாவட்டம் மஞ்சக்கொல்லையில் தாக்கப்பட்ட பாமக நிர்வாகியை சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற பாமக மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிப்பதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த மஞ்சக்கொல்லையில் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட செல்லத்துரை என்ற இளைஞரின் குடும்பத்தினரையும், ஊர்மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சென்ற பா.ம.க. மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் உள்ளிட்ட 10 பேர் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
செல்லத்துரைக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பா.ம.கவினர் போராட்டம் நடத்தியுள்ளனர். இதைத் தவிர வேறு எந்த செயலிலும் பா.ம.க.வினர் ஈடுபடவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைக் கடந்து, பட்டியலின மக்களுக்கு எதிராக ஒரு வார்த்தைக் கூட பாட்டாளி மக்கள் கட்சியினர் பேசவில்லை.
மஞ்சக்கொல்லை கிராமத்தில் செல்வமகேஷ் கலந்து கொண்ட அனைத்து நிகழ்வுகளும் காணொலியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் எந்த இடத்திலும் பட்டியலினத்தவருக்கு எதிராக எதுவும் பேசவில்லை. அவ்வாறு இருக்கும் போது அவர் மீது வழக்குப் பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. அடுத்ததாக, விடுதலை சிறுத்தைகள் கொடிக்கம்பத்தைத் தாக்கிய அதே பெண்மணி தான், பா.ம.கவின் கொடிக் கம்பத்தையும் கடப்பாரைக் கொண்டு தாக்கியிருக்கிறார்.
அவ்வாறு இருக்கும் போது அவரை பா.ம.க. மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் தான் தூண்டி விட்டார் என்று விடுதலை சிறுத்தைகள் கூறியதை நம்பி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்கிறார்கள் என்றால் அவர்களுக்கு ஆறாம் அறிவு இல்லையா? தமிழ்நாட்டின் குடிமகன் என்ற முறையில் செல்லத்துரைக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் முதல் ஆளாக கண்டித்திருக்க வேண்டும்; நீதி வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அவருக்குள் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் வன்னியர் விரோத நெருப்பு அதைத் தடுத்து விட்டது.
திமுக அரசின் அடக்குமுறைகளையும், பொய்வழக்குகளையும் முறியடிக்கும் திறனும், உறுதியும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உண்டு. அதேநேரத்தில் வன்னியர்களுக்கு எதிராக தாக்குதல்களை கட்டவிழ்த்து விடும் கும்பலை வன்னியர் வன்ம மனநிலையுடன் ஆதரித்துக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவுக்கு பாட்டாளி மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள் என்பது உறுதி,"என தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Image credits-ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்