தேனி:வீரபாண்டி அருகே மகன்கள் தன்னை பார்க்க வராததால் மன உளைச்சலில் இருந்த 94 வயது மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் வீரபாண்டி முல்லைப் பெரியாறு ஆற்றின் ஓரத்தில் இறந்த மூதாட்டியின் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருந்துள்ளது. அதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வீரபாண்டி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த வீரபாண்டி போலீசார், உயிரிழந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மூதாட்டி உயிரிழந்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், மூதாட்டி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும், தற்கொலை செய்து கொண்ட மூதாட்டி கம்பம் பிள்ளையார் கோயிலைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. மேலும், இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாக தனது மகனிடம் ஏற்பட்ட பிரச்னைையில், கோபித்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும், அப்போது மூதாட்டியை காப்பாற்றி பேத்தி வீட்டில் வைத்து பராமரித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.