திருவள்ளூர்:ஒரு லட்சம் கட்டினால் 4 லட்சம் ரூபாய் திருப்பி வழங்கப்படும் என நம்பவைத்து 1930 பேரிடம் சுமார் ரூ. 87 கோடி மோசடி செய்ததாக ஸ்வர்ணதாரா குழுமத்தின் பிசினஸ் அசோசியேட்டர் மீது பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
சென்னையில் ஸ்வர்ணதாரா குழுமம் என்ற பெயரில் நிதி நிறுவனம் கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் அளிக்கப்படும் கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி ஏராளமானவர்கள் பணத்தை செலுத்தியுள்ளனர். அந்த வகையில், ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 100 சதவீதம் லாபத்தை வருடாவருடம் கொடுப்பதாகவும், மூன்று வருடத்திற்குப் பிறகு முதலீடு செய்த தொகையை திருப்பிக் கொடுத்து விடுவதாகக் கூறியுள்ளனர். இவர்கள் கூறியதை நம்பி ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்துள்ளனர். 2015 முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் வட்டி பணத்தை திருப்பி தந்துள்ளனர்.
இந்நிலையில், திருவள்ளூரில் ரூ.87 கோடி மோசடி செய்ததாக ஸ்வர்ணதாரா குழுமத்தின் பிசினஸ் அசோசியேட்டர் மீது பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், “ திருவள்ளூரில் 2019 ஆம் ஆண்டு ஸ்வர்ணதாரா நிறுவனத்திற்கு, திருவள்ளூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பாண்டுரங்கன் (76) என்பவரை பிசினஸ் அசோசியேட்டாகவும், அவரது மனைவி வசந்தி, மகள் பவானி, மகன்கள் மணிவண்ணன், சரவணன் ஆகியோர் புரோக்கர்களாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
இவர்கள் திருவள்ளூர், பெரம்பலூர், சென்னை, அரியலூர், வேலூர் மற்றும் பிற மாவட்டங்களில் பொதுமக்களிடமிருந்து ஸ்வர்ணதாரா குரூப் ஆஃப் கம்பெனிக்கு, ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள், வியாபாரிகள் என கிட்டத்தட்ட 1930 பேரிடமிருந்து ரூ.87 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளனர். மேலும், 2019 முதல் 2021 வரை 3 ஆண்டுகள் அறிவித்தபடி பணத்தை திருப்பி செலுத்தியுள்ளனர்.