சென்னை:இந்திய நாட்டின் 76-வது குடியரசு தினம் ஜனவரி 26ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழாவின் முதல் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று (ஜன.20) நடைபெற்றது.
இந்த ஜனவரி 26ஆம் தேதி நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்ற உள்ளார். அந்த நிகழ்ச்சியில் கலச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக அணிவகுப்புகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் அந்த அணிவகுப்பிற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதையடுத்து, வருகிற ஜன.22, 24ஆம் தேதிகளிலும் ஒத்திகை நிகழ்ச்சியானது நடைபெற உள்ளதால் அன்றைய தினங்களிலும், குடியரசு தினத்தன்றும் சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காமராஜர் சாலையில், காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றயை ஒத்திகை அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஆளுநர் மற்றும் முதலமைச்சர் வருவது போல் ஒத்திகைகள் மற்றும்
முப்படை வீரர்கள், காவல் துறையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், தேசிய மாணவர் படையினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே குடியரசு தின விழா நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு அந்த பகுதிகளில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் மாற்று இடமாக உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நடைபெற உள்ளது.