சென்னை:நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 19ம் தேதி முதல் தொடங்கி 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. குறிப்பாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்.19 தேதி தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்துத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து தீவிரமடைந்துள்ளது. அந்த வகையில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணத்தினை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் தேர்தலை ஒட்டி சிலர் பணப் பட்டுவாடாவில் ஈடுபடுவதாக வந்த தகவல் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அளித்த புகாரில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று ஒரே நாளில் பல்வேறு பகுதிகளில் அதிரடியாகச் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், சென்னை விருகம்பாக்கம், சேலம் ,திருச்சி, தென்காசி, செய்யாறு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், நேற்று ஒரே நாளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத நான்கு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையைப் பொருத்தவரை விருகம்பாக்கம் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் பழ வியாபாரி வீடு உள்ளிட்ட சில இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 2.60 கோடி ரூபாய் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல் திருச்சி மாவட்டத்தில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் 50 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனையில் 20 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, அதேபோல செய்யாறு,தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், நேற்று ஒரே நாளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில், கைப்பற்றப்பட நான்கு கோடி ரூபாய் பணத்திற்கு எந்த ஒரு உரிய ஆவணமும் கணக்குக் காட்டாமல் வைத்திருந்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்துத் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "துரை வைகோவை ராகிங் செய்யும் திமுக அமைச்சர்கள்" - புதுக்கோட்டையில் மாஜி அமைச்சர் கூறியது என்ன? - Lok Sabha Elections 2024