தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 16, 2024, 9:21 AM IST

ETV Bharat / state

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் விருப்ப மொழியில் 35 மதிப்பெண் பெறுவது கட்டாயம்..! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

10th public Exam: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் விருப்ப மொழிப் பாடத்தில் 35 மதிப்பெண் பெறுவது கட்டாயம் எனவும், இனி இந்த மதிப்பெண் தேர்ச்சிக்குரிய கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

35 marks is mandatory for optional language subject in 10th public exam
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் விருப்ப மொழியில் 35 மதிப்பெண் பெறுவது கட்டாயம்

சென்னை:பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறுபான்மை மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது ஆகியவற்றை விருப்ப மொழிப் பாடமாக எழுதும் தேர்வர்களும் அதில் கட்டாயம் 35 மதிப்பெண் பெற வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் அரசாணை வெளியிட்டிருக்கிறார். அதில், நான்காவது விருப்ப பாடமாக இடம்பெறும் தமிழ் அல்லாத பிறமொழிப் பாடங்களுக்கு, 35 மதிப்பெண் தேர்ச்சிக்குரிய மதிப்பெண் என்றும், இந்த மதிப்பெண் இனி தேர்ச்சிக்குரிய கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும், இந்த புதிய நடைமுறை அடுத்த கல்வியாண்டில் (2024-2025) இருந்து அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் தமிழ் அல்லாத பிறமொழிப் பாடத்தை விருப்ப பாடமாகத் தேர்வு செய்யக்கூடிய மாணவர்களுக்கு, அடுத்த கல்வி ஆண்டிலிருந்து ஒட்டுமொத்தமாக 6 பாடங்கள், 600 மதிப்பெண்கள் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. மற்ற மாணவர்களுக்கு வழக்கம் போல் 5 பாடங்கள், 500 மதிப்பெண்கள் என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அரசாணையில் கூறப்பட்டிருக்கிறது.

முன்னதாக, விருப்ப மொழிப் பாடத்தினை எழுத விரும்பாதவர்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்களுக்குத் தேர்வு எழுதி ஒவ்வொரு பாடத்திலும் 35 மதிப்பெண் தேர்ச்சி மதிப்பெண்களாகப் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது. மேலும், தமிழ் மொழிப் பாடத்தில் தேர்வு எழுதுவது கட்டாயம் என்பது தொடர்ந்து அமலில் உள்ளது.

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வைப் பொருத்தவரை, பொதுத்தேர்வு அறிமுகம் செய்ததிலிருந்து தற்போது வரை ஐந்து பாடங்கள் தான். ஒவ்வொரு பாடத்திற்கும் தலா 100 மதிப்பெண்கள் என 500 மதிப்பெண்கள் என்ற நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என முறையே 5 பாடங்களுக்குத் தேர்வுகள் நடத்தப்பட்டு 500 மதிப்பெண்களுக்குத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் கடந்த 2006ஆம் ஆண்டு கட்டாயம் தமிழ் படிக்கும் சட்டத்தை அப்போதைய திமுக அரசு கொண்டு வந்தது. தமிழ் அல்லாமல் பிற மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் 10ஆம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாகப் படிக்காமலேயே உயர்கல்விக்கு சென்று விடுகிறார்கள் என்றும், எனவே பத்தாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் கட்டாயம் தமிழ் படிக்க வேண்டும் எனவும், தமிழ் தேர்வு எழுத வேண்டும் என்ற அடிப்படையில் அந்த சட்டத்தை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி கொண்டு வந்தார்.

அதன்படி, அந்த ஆண்டு 1ஆம் வகுப்பிற்குக் கட்டாயம் தமிழ் பாடம் அமல்படுத்தப்பட்டது. இப்படி படிப்படியாக பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய தேர்வாகக் கொண்டுவரப்பட்டு விட்டது. தற்போது பத்தாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்கள் அனைவருக்கும் தமிழ் பாடம் கட்டாயத் தேர்வாக இருந்து வருகிறது.

தமிழைத் தாய் மொழியாக இல்லாத மாணவர்கள், தங்கள் மொழிப் பாடத்தைப் படிக்க வேண்டும் என்று விரும்பியதால், பிறமொழியைத் தாய் மொழியாகக் கொண்ட மாணவர்கள் அவர்களது மொழிப் பாடத்தை, தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களைத் தொடர்ந்து நான்காவது விருப்ப பாடமாகப் படிக்கலாம் என்றும், ஆனால் அதில் பெறக்கூடிய மதிப்பெண்கள் தேர்ச்சிக்குக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்றும் அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி, சிறுபான்மை வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் விருப்ப பாடங்களை அதிக அளவில் படிக்கின்றனர். எனினும் மதிப்பெண் பட்டியலில், அந்த பாடம் இடம் பெற்றாலும், தேர்ச்சி அல்லது தோல்வி என்று குறிப்பிடுவது இல்லை. வழக்கம்போல் தமிழ் உள்ளிட்ட ஐந்து பாடங்களுக்கான மதிப்பெண்கள் மட்டுமே தேர்ச்சி கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு வருகின்றன.

தங்களது மொழிக்கானத் தேர்வில் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதது அவமதிப்பதாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் சிறுபான்மை சமுதாய அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கில், விருப்ப பாடத்திற்கும் மதிப்பெண்கள் வழங்கி தேர்ச்சிக்குரிய மதிப்பெண்களை நிர்ணயம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பிறந்து 1 மாதமே ஆன ஆண் குழந்தை..! பேருந்துக்காகக் காத்திருந்தவரிடம் குழந்தையைக் கொடுத்து விட்டு மாயமான பெண்..!

ABOUT THE AUTHOR

...view details