சென்னை:எதிர் வரக்கூடிய 2024 நாடாளுமன்றத் தேர்தலில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இருப்பினும் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது முடிவு செய்யப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த கே.பாலகிருஷ்ணன் பேசுகையில்,"தேர்தல் ஆணையரைப் பயன்படுத்தித் தேர்தல் ஆணையத்தை முழுக்க முழுக்க தனது அரசியல் ஆயுதமாக பாஜக மாற்றியுள்ளது. அதற்கு உடன் போனதன் காரணமாக,தேர்தல் ஆணையர் பதவி விலகியுள்ளார்.
திமுக கூட்டணியில் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - திமுக இடையே இன்று(மார்ச் 12) தொகுதி இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
திமுக தலைமையிலான கூட்டணியில் கடந்த 29ஆம் தேதி இரண்டு தொகுதியில் போட்டியிடுவது என உடன்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து தொகுதிகளை அடையாளம் காணும் பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இதில் மதுரை, திண்டுக்கல் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவது உடன்பாடு ஏற்பட்டுள்ளது.