தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பண்ருட்டி அருகே பதுக்கி வைக்கப்பட்ட 2000 லிட்டர் மெத்தனால்... கள்ளக்குறிச்சி சம்பவத்துடன் தொடர்பா? - METHANOL SEIZED IN PANRUTI

Methanol Seized: பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனாலை பதுக்கி வைத்த பெட்ரோல் பங்கிற்கு சிபிசிஐடி போலீசார் சீல் வைத்துள்ளனர். இந்த பதுக்கல் மெத்தனால் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்துடன் தொடர்புடையதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 4, 2024, 1:16 PM IST

மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் பங்க்
மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் பங்க் (Credits - ETV Bharat Tamil Nadu)

கடலூர்:கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த 18ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்ததில் பலருக்கும் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் இதுவரை 66 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், வழக்கில் தொடர்புடைய பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் முக்கிய நபரான மாதேஷ் உள்ளிட்டோரை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின்போது, சமீபத்தில் மாதேஷ் மெத்தனாலை எந்தெந்த இடத்தில் வாங்கினார் என்ற விவரங்களை சேகரித்த போலீசார், அவர் பதுக்கி வைத்திருந்த 10 க்கும் மேற்பட்ட மெத்தனால் பேரல்களை கைப்பற்றினர். இருப்பினும் மாதேஷ் வாங்கிய மெத்தனாலுக்கும், கைப்பற்றப்பட்ட மெத்தனாலுக்கும் இடையே பெரிய அளவில் வித்தியாசம் இருப்பதை உணர்ந்த சிபிசிஐடி போலீசார், அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. விசாரணையில், பண்ருட்டி அருகே உள்ள வீரப்பெருமாநல்லூர் என்ற இடத்தில் இயங்காத பெட்ரோல் பங்கில் பெட்ரோல் சேமித்து வைத்திருக்கும் டேங்கருக்குள் மெத்தனாலை சேமித்து வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதனை அடுத்து இரவோடு இரவாக அங்கு வந்து விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார் பூமிக்கு அடியில் இருக்கும் பெட்ரோல் டேங்கினுள் 2000 லிட்டர் மெத்தனால் இருப்பதை உறுதி செய்தனர். பின்னர் அந்த பெட்ரோல் பங்கிற்கு தற்சமயமாக சீல் வைத்து போலீஸ் பாதுகாப்பு போட்டுள்ளனர்.

மேலும் இந்த பகுதியில் மெத்தனாலை எடுக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்திற்கு சாராயத்தில் மெத்தனால் அதிக அளவில் கலந்ததுதான் காரணம் என்று கூறப்படும் நிலையில், தற்போது 2000 லிட்டர் மெத்தனால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் இன்னும் எத்தனை இடங்களில் மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. யாரெல்லாம் மெத்தனால் சப்ளை செய்திருக்கிறார்கள் என்ற கோணத்தில் சிபிசிஐடி போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மீண்டும் கள்ளச்சாராய விற்பனை.. கள்ளக்குறிச்சியில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!

ABOUT THE AUTHOR

...view details