நீலகிரி:கூடலூர் அருகே உள்ள தேவர் சோலை பேரூராட்சிக்குட்பட்ட Three division பகுதியைச் சேர்ந்தவர் ஜேம்ஷித் (37) இவர் கடந்த சில வருடங்களாக பெங்களூரில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வந்தார். தற்போது ஜேம்ஷித் கடந்த ஒரு வாரமாக விடுமுறையில் சொந்த ஊரான தேவர் சோலை அடுத்த Three divisionனில் அவரது வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் ஜேம்ஷித் 25ஆம் தேதி அன்று இரவு நண்பர்களுடன் வனப்பகுதிக்குள் சென்று உள்ளார்.
இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் காலை சுமார் 6 மணி அளவில் அவருடைய நண்பர்கள் நான்கு பேர் ஜேம்ஷித் காட்டு யானை தாக்கிவிட்டதாக கூறி கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். மருத்துவர்கள் பரிசோதித்ததில் ஜேம்ஷித் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. உடனடியாக காவல் துறைக்கும், வனத்துறைக்கும் மருத்துவமனையில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டது.
வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விசாரித்த போது ஜேம்ஷித் காட்டு யானை தாக்கியதாக கூறப்பட்ட இடத்தில் ஆய்வு செய்துள்ளனர். அப்போது காட்டு யானைகள் அப்பகுதிக்கு வந்ததற்கான எந்த தடயமும் இல்லை என தெரிவித்து வழக்கை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து ஜேம்ஷித் இறந்த வழக்கில் கூடலூர் டிஎஸ்பி வசந்தகுமார் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே ஜேம்ஷித் மருத்துவமனைக்கு கொண்டு வந்த நான்கு நண்பர்களும் தலைமறைவானார்.
மேலும் கூடலூர் அரசு மருத்துவமனை சுற்றி ஊர் பொதுமக்கள் கூடியதால், ஜேம்ஷித் உடல் உதகை தலைமை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. தேவர் சோலை Three division பகுதியில் பரிசோதித்த காவல்துறையினர் நான்கு நாட்டு துப்பாக்கிகள், அதற்குப் பயன்படுத்தக்கூடிய வெடி மருந்துகள் ஒரு கிலோ கைப்பற்றினர்.
இதையும் படிங்க: குடியிருப்புக்குள் ஹாயாக வலம் வரும் கரடிகள்! வைரலாகும் வீடியோ! - COONOOR BEAR ENTERS VILLAGE
காவல்துறை விசாரணையில் ஜேம்ஷீர் மற்றும் அவரது நண்பர்களும், மான் வேட்டைக்காக வனப்பகுதியில் சென்றதாகவும், மான் வேட்டையில் துப்பாக்கி குண்டு எதிர்பாராத விதமாக ஜேம்ஷீர் மீது பாய்ந்ததாக கூறப்படுகிறது. தலைமறைவான நான்கு பேரும் கூடலூர் காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்தனர். மேலும் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் படி இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 13 பேரையும் தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.