உதகை 126வது மலர் கண்காட்சியின் வீடியோ காட்சிகள் (Video Credits - ETV Bharat Tamil Nadu) நீலகிரி: நீலகிரி மாவட்டம், உதகை தாவரவியல் பூங்காவில் 126-வது மலர்க் கண்காட்சி இன்று (மே 10) தொடங்கி வரும் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை ஒட்டி, அரசு தாவரவியல் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள 5 லட்சம் மலர்ச் செடிகளில் பல வண்ணங்களில் ஏராளமான மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
மேலும், 45 ஆயிரம் மலர் தொட்டிகள் மலர் மாடத்தில் பார்வையாளர்களைக் கவரும் வகையில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன. பல வண்ணங்களைக் கொண்ட ஒரு லட்சம் ரோஜா மலர்களைக் கொண்டு பிரமாண்ட டிஸ்னி வேர்ல்டு மாதிரி, 80 ஆயிரம் ரோஜா மலர்களைக் கொண்டு நீலகிரி மலை ரயில் மற்றும் மலர் கோபுரங்கள் உட்பட 10 வகையான மலர் அலங்காரங்கள், பல லட்சம் ரோஜா மலர்கள், கார்னேசன் மற்றும் செவ்வந்தி மலர்களைக் கொண்டு அலங்கார உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ரோஜா மலர்களால் உருவாக்கப்பட்டுள்ள டிஸ்னி வேர்ல்டின் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu) இந்த நிலையில், உதகை தாவரவியல் பூங்காவில் இந்த ஆண்டு 10 நாட்கள் நடைபெறும் மலர்க் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சியை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, வேளாண் உற்பத்தி ஆணையர் அபூர்வா ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து பார்வையிட்டனர்.
மேலும், இந்த துவக்க விழாவில், மாவட்ட ஆட்சியர் மு.அருணா மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரும் பங்கேற்றனர். இவர்களைத் தவிர்த்து, ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் மற்றும் உள்ளூர்வாசிகளும் இந்த மலர் கண்காட்சியைக் கண்டு ரசித்துச் சென்றனர்.
80 ஆயிரம் ரோஜா மலர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நீலகிரி மலை ரயிலின் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu) இந்த மலர் கண்காட்சி குறித்து ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியான அனிதா கூறுகையில், "கோடை கால சுற்றுலாவாக குடும்பத்துடன் ஊட்டி வந்தோம். தற்போது, மலர் கண்காட்சி துவங்கியுள்ளதால், அதனையும் பார்த்து மகிழ்ந்தோம். இந்த மலர் கண்காட்சியில் ஏராளமான அரியவகை பூக்கள் அழகழகாக உள்ளது. ஆகவே, இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கண்டிப்பாக இந்த மலர் கண்காட்சியைப் பார்த்து மகிழுங்கள்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:6 டன் எடையுள்ள தேரை தூக்கிச் சென்ற பக்தர்கள்.. தஞ்சாவூரில் கோலாகலம்!