ஐதராபாத்:இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி. தனது ஆக்ரோஷமான பேட்டிங் திறன் மூலம் தோல்வியை நோக்கி பயணித்த பல போட்டிகளின் போக்கையே மாற்றி வெற்றி தேடித் தந்தவர் விராட் கோலி. அப்படிப்பட்ட விராட் கோலி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்டில் மொத்தம் 64 இன்னிங்ஸ்களில் விளையாடி வெறும் 8 சிக்சர்கள் மட்டுமே அடித்துள்ளார்.
அதேநேரம், சில இந்திய பவுலர்கள் விராட் கோலியை காட்டிலும் அதிக சிக்சர்கள் அடித்து அமர்களப்படுத்தி உள்ளனர். அப்படி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி அதிக சிக்சர்கள் விளாசிய டாப் 5 இந்திய பவுலர்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
உமேஷ் யாதவ்:
வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், இந்திய அணிக்காக அவர் விளையாடி ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருந்தார்.
அதன்பின் இந்திய அணிக்கு அவர் தேர்வு செய்யப்படவில்லை. அவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி ஏறத்தாழ ஓராண்டு காலம் நிறைவு பெற்ற போதும், விராட் கோலியை விட அதிக சிக்சர்கள் அடித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மொத்தம் 21 இன்னிங்ஸ்களில் விளையாடிய உமேஷ் யாதவ் அதில் 15 சிக்சர்கள் விளாசியுள்ளார்.
ரவிந்திர ஜடேஜா:
இந்திய அணியின் மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம் ஆல் ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா. விராட் கோலியை போன்று ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர். பல போட்டிகளில் கடைசி வரை நிலைத்து நின்று விளையாடி அணிக்கு வெற்றியை தேடித் தந்து உள்ளார். ரவிந்திர ஜடேஜா 47 இன்னிங்ஸ்களில் விளையாடி மொத்தம் 26 சிக்சர்கள் விளாசி உள்ளார்.