ஐதராபாத்:17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மே.2) இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் 50வது லீக் ஆட்டத்தில் சன்ரைசஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயலஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டாஸ் வென்ற சன்ரைசஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்து உள்ளார் . நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் அணி இதுவரை விளையாடிய 9 ஆட்டங்களில் 5ல் வெற்றியும், 4ல் தோல்வியும் கண்டு 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இந்த சீசனில் முதலில் பேட்டிங் செய்து இதுவரி 3 முறை 250 ரன்களுக்கு மேல் குவித்து வரலாறு படைத்துள்ள அந்த அணி, 2வது பேட்டிங்கில் ஒருமுறை கூட 200 ரன்னுக்கு மேலான இலக்கை எட்டிப்பிடிக்கவில்லை.
ஐதராபாத் அணி தனது கடைசி 2 ஆட்டங்களில் பெங்களூரு மற்றும் சென்னை அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. எனவே, அந்த அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் உள்ளதால் இந்த ஆட்டத்தில் கடுமையாக விளையாடும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
மறுபுறம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 ஆட்டங்களில் விளையாடி 8ல் வெற்றியும், ஒரு தோல்வியும் கண்டு 16 புள்ளி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் ராஜஸ்தான் அணி பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்பை அதிகாரபூர்வமாக உறுதி செய்துவிடும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.