ஐதராபாத்:ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய அணியின் கேப்டனாக சுப்மான் கில் நியமிக்கப்பட்டு உள்ளார். விராட் கோலி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோருக்கு இந்த தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி ஜூலை 6ஆம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து ஜூலை 7, 10, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மற்ற நான்கு டி20 கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறுகின்றன.
இந்த போட்டிகள் அனைத்தும் ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையல், ஜிம்பாப்வே டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. அஜித் அகர்கர் தலைமையிலான பிசிசிஐ தேர்வு கமிட்டி குழு இந்திய அணியை அறிவித்துள்ளது.
அதன்படி கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே, ஆல்-ரவுண்டர் ரியான் பராக், இடது கை பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா, விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் ஆகியோர் முதல் முறையாக அணியில் இடம் பிடித்துள்ளனர். மேலும் மற்றொரு விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.