ஐதராபாத்:இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 22ஆம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது.
நியூசிலாந்து தொடரை முழுவதுமாக கோட்டைவிட்ட இந்திய அணி, பார்டர் கவாஸ்கர் டிராபியை பெரும்பான்மையுடன் கைப்பற்றினால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு நேரடியாக நுழைய முடியும். அதேநேரம், சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது என்பது மிகக் கடினமான காரியம்.
இந்திய அணியில் பவுலிங் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு நன்றாக இருந்தாலும், பேட்டிங் ஆர்டர் மிக மோசமாக உள்ளது. நியூசிலாந்து தொடரில் அணியின் சீனியர் பேட்ஸ்மேன்களான விராட் கோலி (ஒரு அரை சதம் உள்பட) 93 ரன், ரோகித் சர்மா 91 ரன்கள் மட்டும் அடித்து மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்திய மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது என்பதே சவாலான விஷயம் என்ற நிலையில், ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகக் கடுமையானதாகும். ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களுக்கு ஈடுகொடுத்த விளையாடினால் மட்டுமே இந்திய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுப்பதில் இருந்து தப்ப முடியும்.