ஹைதராபாத்: ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் தற்போது கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்று நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கு கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத், பெங்களூரு அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இந்த நிலையில், இன்றுடன் இத்தொடரின் லீக் ஆட்டங்கள் நிறைவடையும் பட்சத்தில், இன்று மாலை ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியே முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் அதர்வ தைடே களம் இறங்கினர். எளிதில் இந்த கூட்டணியை வீழ்த்திவிடலாம் என நினைத்த ஹைதராபாத் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஹைதராபாத்தின் பந்து வீச்சை இந்த கூட்டணி விளாசியது. குறிப்பாக, 97 ரன்கள் அடித்த பின்பே முதல் விக்கெட்டை விட்டுக் கொடுத்தது இந்த கூட்டணி. இருவரும் சிறப்பாக விளையாடினர். தைடே 46 ரன்களில் நடராஜன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து, அரைசதம் விளாசிய பிரப்சிம்ரன் சிங் 71 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.