மும்பை:இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 22 ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. இந்த சீஸனின் முதல் ஆட்டத்தில் கடந்தாண்டு டைட்டில் வென்ற கொல்கத்தா அணியுடன் ஒரு முறை கூட சீசனை வெல்லாத பெங்களூரு மோதுகிறது. இதனால் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியே எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
இந்நிலையில், ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கான அதிகாரப்பூர்வ ஜெர்ஸியை வெளியிட்டுள்ளது. நீலம் மற்றும் தங்க நிறத்துடன் கொண்ட ஜெர்ஸியை ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் அணிந்திருக்கும் புகைப்படங்களை மும்பை இந்தியன்ஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
நீல நிறமானது அணியின் நம்பிக்கை மற்றும் திறனையும், தங்க நிறம் பெருமை, சாதனை மற்றும் விடா முயற்சியையும் குறிப்பதாக மும்பை இந்தியன்ஸ் அணி கருதுகிறது. ரசிகர்கள் பிளேயர் எடிஷன் ஜெர்ஸிகளை (வீரர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்படுவது) 4,999 ரூபாய்க்கும், ரெப்ளிகா வெர்ஷனை (நகல்) 2,499 ரூபாய்க்கும் வாங்கிக் கொள்ளலாம். ஆன்லைனில் மும்பை இந்தியன்ஸின் அதிகாரபூர்வ இணையதளத்தில் (MI Shop) ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம்.
ஜஸ்பிரித் பும்ரா (ETV Bharat) ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மார்ச் 23 அன்று சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்சுடன் மோதுகிறது. இரண்டு அணியின் ரசிகர்களும் இந்த ஆட்டத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த சீசனில் இரண்டு அணிகளும் சந்திக்கும் முதல் போட்டி என்பதோடு இந்த ஆட்டம் சென்னையில் நடக்கவுள்ளதால் சிஎஸ்கே ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக அமையும். மேலும், கடந்த சீசனை நழுவ விட்ட மும்பை அணி இந்த சீசனை சிறப்பாகத் தொடங்க வேண்டும் என்று நினைக்கும். மேலும், மெகா ஏலத்தில் டிரெண்ட் போல்ட் மற்றும் வில் ஜாக்ஸ் போன்ற சிறப்பான வீரரர்களை மும்பை அணி வாங்கியிருப்பது அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும்.
மும்பை இந்தியன்ஸ் முழு அணி:
ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா, திலக் வர்மா, டிரென்ட் போல்ட், நமன் திர், ராபின் மின்ஸ், கர்ண் சர்மா ரியான் ரிக்கல்டன், தீபக் சாஹர், முஜீப் உர் ரஹ்மான், வில் ஜாக்ஸ், அஸ்வனி குமார், மிட்செல் சாண்ட்னர், ரீஸ் டாப்லி, கிருஷ்ணன் ஸ்ரீஜித், ராஜ் அங்கத் பாவா, சத்யநாராயண ராஜு, பெவன் ஜேக்கப்ஸ், அர்ஜுன் டெண்டுல்கர், லிசாத் வில்லியம்ஸ், விக்னேஷ் புதூர்.