ஹைதராபாத்:பாராலிம்பிக்ஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் வெள்ளிப்பதக்கமும், மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். இந்த வெற்றியின் மூலம் ஒரே போட்டியில் 2 பதங்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள தமிழக வீராங்கனைகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து உள்ளனர்.
பிரமதர் மோடி:பாரா ஒலிம்பிக் 2024ல் மகளிர் பேட்மிண்டன் போட்டியில் துளசிமதி வெள்ளிப் பதக்கம் வென்று பெருமையின் ஒரு தருணம்! அவரது வெற்றி பல இளைஞர்களை ஊக்குவிக்கும். விளையாட்டில் அவர் காட்டும் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல வெண்கலம் வென்ற மனிஷா ராமதாஸைப் பாராட்டிய பிரமதர் , "பாரா ஒலிம்பிக்கில் பெண்களுக்கான பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வெல்ல மனிஷா ராமதாஸின் முயற்சி சிறப்பானது. அவரது அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியால் இந்த நம்பமுடியாத சாதனை சாத்தியமாகி இருக்கிறது வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:'பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசனுக்கு வாழ்த்துகள்! உங்களின் அர்ப்பணிப்பும், நெகிழ்ச்சியும், தளராத மனப்பான்மையும் லட்சக்கணக்கானோரை ஊக்குவிக்கிறது. நாங்கள் உங்களைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம் என பதிவிட்டுள்ளார்.
அதே போல் வெண்கலம் வென்ற மனிஷா குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது , "மனிஷா ராமதாசுக்கு வாழ்த்துகள்! உங்கள் தைரியமும், மன உறுதியும் தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. தொடர்ந்து பிரகாசியுங்கள்!" என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா:பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ள துளமதிக்கு வாழ்த்துகள். உங்களுடைய வெற்றியை நினைத்து தேசம் உங்களை வணங்குகிறது, சாம்பியன் என தெரிவித்துள்ளார்.
இதே போல் மனிஷாவிற்கு வெளியிட்டுள்ள பதிவில், "இளம் தலைமுறையினரை ஊக்குவிக்கும் ஆற்றல், மற்றும் மகிமை ஆகியவற்றின் சக்திவாய்ந்த கதையை நீங்கள் கொண்டு வந்துள்ளீர்கள், வெண்கலப் பதக்கத்தை வென்ற சாம்பியனுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்:சர்வதேச அரங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனை படைத்திருக்கும் துளசிமதி முருகேசன் மற்றும் மனிஷா ராமதாஸ் ஆகிய இருவருக்கும் நம் பாராட்டுகள். தமிழ்நாடு அரசின் ELITE திட்டம் & தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் பயன்பெற்று வரும் இவ்விரு வீராங்கனையிருக்கும், பாரா ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வான போதே தலா ரூ.7 லட்சத்தை சிறப்பு ஊக்கத்தொகை வழங்கி உற்சாகப்படுத்தினோம். இன்றைக்கு பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும்- தமிழ்நாட்டுக்கும் பெருமைத் தேடித்தந்துள்ள அவர்களை வாழ்த்தி மகிழ்கிறோம்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:பேட்மிண்டனில் இந்தியாவுக்கு தங்கம்!